2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

5ஆவது போட்டி கைவிடப்பட்டது

A.P.Mathan   / 2012 நவம்பர் 12 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 28.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டு போட்டி இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்தும் மழை காணப்பட்டதால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக உபுல் தரங்க 94 பந்துகளில் 60 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 26 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

இன்றைய போட்டியில் லஹிரு திரிமன்ன 3ஆம் இலக்கத்திலும், அன்ஜலோ மத்தியூஸ் 4ஆம் இலக்கத்திலும் துடுப்பெடுத்தாடிய போதிலும் இருவரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியிருக்கவில்லை.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ரிம் சௌதி 5.3 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அன்ட்ரூ எலிஸ் 4 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ட்ரென்ட் போல்ட், அடம் மில்ன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

5 போட்டிகளில் முதலாவது, இறுதிப் போட்டி ஆகியன மழை காரணமாகக் கைவிடப்பட்ட நிலையில் ஏனைய 3 போட்டிகளையும் வெற்றிகொண்டு இலங்கை அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடர் நாயகனாக நியூசிலாந்து அணியின் பி.ஜே.வற்லிங் தெரிவுசெய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .