2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இந்தியாவைத் தோற்கடித்து சுப்பர் 6 இற்குச் செல்லுமா இலங்கை?

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளின் சுப்பர் 6 சுற்றுக்குச் செல்லும் அணியைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இலங்கை, இந்திய மகளிர் அணியினர் மோதவுள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி சுப்பர் 6 சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெறவுள்ளது.

மும்பை பிரட்பேர்ண் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இன்று பிற்பகல் 2.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளதோடு, இப்போட்டி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

இத்தொடரில் தனது முதலாவது போட்டியில் நடப்பு சம்பியன்களான இங்கிலாந்து அணியை அதிர்ச்சித் தோல்விக்குள்ளாக்கிய இலங்கை அணியினர், அடுத்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் பாரிய தோல்வியைச் சந்தித்திருந்தது. இதன் காரணமாக இலங்கையின் நிகர ஓட்ட சராசரி விகிதம் மறை நிலையில் காணப்படுகிறது.

மறுபுறத்தில் தனது முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தோற்கடித்த இந்திய அணி, நடப்பு சம்பியன்களான இங்கிலாந்திடம் தோல்வியடைந்திருந்தது. எனினும் இந்தியாவின் நிகர ஓட்ட சராசரி விகிதம் நேர் நிலையிலேயே காணப்படுகிறது.

இலங்கை, இந்திய அணிகள் குழு "ஏ" இல் இடம்பெற்றிருக்கும் நிலையில் இக்குழுவிலுள்ள 4 அணிகளான இலங்கை, இந்திய, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன.

ஒவ்வொரு குழுவிலிருந்தும் 3 அணிகள் அடுத்த சுற்றுக்குச் செல்லவுள்ள நிலையில் இன்று இடம்பெறவுள்ள இலங்கை - இந்திய, இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெறும்.

தோல்வியுறும் அணிகளில் சிறப்பான நிகர ஓட்ட சராசரி விகிதத்தைக் கொண்டுள்ள அணி 3வது அணியாக சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெறும்.
இலங்கையின் நிகர ஓட்ட சராசரி விகிதம் மறை நிலையில் காணப்படுவதால் இன்றைய போட்டியை வெற்றிகொள்வதே இலங்கை அணிக்குச் சிறப்பானதாக அமையும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--