2020 ஜூலை 15, புதன்கிழமை

எதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா?; இன்று இறுதி

Editorial   / 2019 டிசெம்பர் 05 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியதை அடுத்து, பூதாகரமான எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில், இன்று (05) இறுதித் தீர்மானம் எட்டப்படுமென, ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஐ.தே.கவின் உள்வீட்டு விவகாரம் சூடுபிடித்தது, எதிர்க்கட்சித் தலைவர் பதவியும், கட்சியின் தலைமைத்துவமும், சஜித் பிரேமதாஸவுக்கே வழங்கப்படவேண்டுமென, சஜித் சார்பான அணியினர் வலியுறுத்தி வருகின்றனர். 

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ, ரணில் விக்கிரமசிங்கவிடமே இருக்கவேண்டுமென, ரணிலுக்கு சார்பானவர்கள் கருத்துரைக்கின்றனர். 

இதற்கிடையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகள் பலர், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கும் தீர்மானித்துள்ளனர். 

இந்நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட சகல காரணங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக்கூட்டம், இன்று (05) நடைபெறவுள்ளது. 

“நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இந்தக் கூட்டம் நடத்தப்படும். 

கட்சிக்குள்ளிருக்கும் பிரச்சினைகளுக்கு பொது இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக சக்திமிக்க பொறிமுறையொன்றைத் தயாரிப்பது தொடர்பிலும், இன்றைய கூட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. 

இதேவேளை, இன்றைய கூட்டத்தில் தீர்மானமொன்று எட்டப்படவில்லையெனில், மாற்றுவழியொன்றை தெரிவு செய்யவேண்டுமென, புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் காரியாலத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமன்றி, ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் நல்லிணக்கமொன்றை ஏற்படுத்துவதற்கு, சபாநாயகர் கருஜயசூரிய முயற்சிசெய்த இரண்டு தடவைகளும், சஜித் பிரேமதாஸ வருகைதரவில்லை. இதனால், கருஜயசூரியவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு, கட்சியின் தலைமை தீர்மானித்துவிட்டதென, ஏற்கெனவே, செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு, இன்று (05) இறுதித் தீர்வு எட்டப்படுமென, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, ஜா-எலயில் நேற்று (05) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

சஜித், ரணில் இருவரும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர். அவ்விருவருக்கு இடையிலும் எவ்விதமான கருத்துமுரண்பாடுகளும் இல்லையெனத் தெரிவித்த அவர், நாளைய (இன்றைய) கூட்டம் தீர்க்கமானது என்றார். 

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையின் கீழ், புதிய தலைமைத்துவ சபையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கண்டிக்கு நேற்று (04) விஜயம் செய்திருந்த சபாநாயகர் கரு ஜயசூரிய, அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மஹாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதற்கு, தான் தலைமை வகிப்பேன்” என மஹாநாயக்கர்களிடம் தெரிவித்திருந்தேன் என்றார். 

சபாநாயகர் என்ற வகையில் தனக்கென ஒரு வரையறை இருக்கின்றதென தெரிவித்த அவர், அரசியல் ரீதியில் செயற்படமுடியாது என்றார். எனினும், தன்னுடைய கட்சி என்ற வகையில், ஏதாவது செய்யவேண்டுமென மஹாநாயக்க தேரர்கள் விடுத்திருக்கும் அழைப்பை தான் ஏற்றுக்கொண்டுள்ளேன் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X