பிரிவடையாது கூட்டமைப்பு நிலைக்கும்?

தமிழரசுக் கட்சியும் டெலோவும் முதற்கட்டமாக இணக்கம்உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிளவுபடலாம் என்று கருதப்பட்ட போதிலும், அப்பிரச்சினைகள் தீர்வதற்கான முதற்கட்ட சமிக்ஞைகள் தென்பட்டுள்ளன.

கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பிரச்சினைகள் சார்பாக ஆராய்வதற்காக, தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும், டெலோ சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், கொழும்பில் நேற்று (06) மாலை 6 மணியளவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டு தரப்பினரும், தத்தமது நிலைப்பாடுகள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர் என அறிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வொன்றைக் காணுவதற்காக, நிபந்தனையுடனான இணக்கமொன்று, இருவருக்குமிடையில் எட்டப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட இணக்கத்தை, பின்னர் இரண்டு கட்சிகளின் உயர்பீடங்களும் கூடி ஆராய்ந்து, அந்நிபந்தனைகளுக்குச் சம்மதிக்கின், உறுதியான இணக்கப்பாடு ஏற்படுமென்பதே, இதன் எதிர்பார்ப்பாகும்.

இதனையடுத்து, இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விரையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இது குறித்து, தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்துடன் கலந்துரையாடவுள்ளார். மறுபக்கமாக, டெலோவின் உயர்பீடத்திலும், இந்நிபந்தனைகளுடனான இணக்கப்பாட்டுக்குச் சம்மதம் ஏற்படுமாயின், தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கான நிலைமை ஏற்படும்.

இதுகுறித்த தகவல்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன், தமிழ்மிரர் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்தியது. இருவருமே, இவ்வாறான நிபந்தனைகளுடனான இணக்கப்பாடு ஏற்பட்டமையை உறுதிப்படுத்தினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த செல்வம் எம்.பி, "எங்களுடைய தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தினேன். எங்களுடைய விட்டுக்கொடுப்புகள் தொடர்பாகவும் கூறினேன். அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதன் காரணமாக, உயர்மட்டத்தின் முடிவுக்கு ஏற்ப, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்குத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனப் பங்கீடு தொடர்பில், யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் ஏற்படாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவதாக இருந்த 3 கட்சிகளும், தனித்தனியாகப் போட்டியிடக்கூடிய சூழல் ஏற்பட்டிருந்தது.
தற்போது, தமிழரசுக் கட்சிக்கும் டெலோவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் இந்த முதற்கட்ட இணக்கப்பாடு, இரு கட்சிகளின் உயர்பீடங்களாலும் அங்கிகரிக்கப்படுமாயின், கூட்டமைப்பின் ஒற்றுமை, காப்பாற்றப்படக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

குறிப்பாக, மூன்றாவது கட்சியான புளொட்டும், இவ்விடயத்தில் விட்டுக்கொடுப்புகளுக்குத் தயார் போன்றவாறான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ள நிலையிலேயே, தற்போது இவ்விணக்கம் ஏற்பட்டுள்ளது.

  • சன்வா Friday, 08 December 2017 09:20 AM

    டெலோ தலைவரும் கூட்டமைப்பின் கடிவாளம் கையில கொண்ட சுமந்திரனும் ரணிலின் வால்ககள்.பிறகென்ன.

    Reply : 0       0


பிரிவடையாது கூட்டமைப்பு நிலைக்கும்?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.