'மகேந்திரனை நம்பினேன்'


-ஷெஹான் சாமிக சில்வா, யொஹான் பெரேரா, ஹபீல் பாரிஸ்

திறைசேரிப் பிணைமுறிகளை வழங்கும் போது, பொது ஏலம் மூலம் வழங்குமாறு, மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்குப் பணிப்பரை விடுத்ததாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனினும் அதை அமுல்படுத்தும் போது, பொருத்தமான கொள்கைச் செயற்பாடுகளை அவர் பின்பற்றுவாரென எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்டார்.

திறைசேரிப் பிணைமுறி தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னர் நேற்று (20) ஆஜராகிச் சாட்சியமளித்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அநேகமான அமைச்சர்கள் புடைசூழ, பிணைமுறி ஆணைக்குழு முன்னர், பிரதமர் சாட்சியமளித்தார்.

பிரதமரின் சாட்சித்தின் போது, முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கும் அவரது மருமகனான அர்ஜுன் அலோசியஸுக்கும் இடையிலான தொடர்பு, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான சொகுசு வீட்டுச் சர்ச்சை, மத்திய வங்கி நடவடிக்கைகளில் பிரதமரின் தலையீடு ஆகிய விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. சுமார் 40 நிமிடங்கள், அவரது சாட்சியமளிப்பு நீடித்தது.

ஆணைக்குழு நடவடிக்கைகளின் ஆரம்பத்தில், பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு தொகுதி வினாக்கள் தொடர்பாக, ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் கே.டி. சித்திரசிறி வெளிப்படுத்தினார். இதன்படி, ஆணைக்குழுவின் ஆணையாளர்களால் முன்வைக்கப்பட்ட 28 வினாக்களும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட 20 வினாக்களுக்கும், பிரதமர் பதிலளித்திருந்தார் எனக் குறிப்பிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காலை 10.25 மணியளவில், ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டிருந்த வினாக்களை, நீதியரசர் சத்திரசிறி எழுப்பினார். பிரதமரால் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த பதில்களில் மேலதிக விளக்கங்களைப் பெறுவதற்காக, இவ்வினாக்கள் எழுப்பப்பட்டன.

அதன்போது இடம்பெற்ற சில முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் பின்வருமாறு:

நீதியரசர் சித்திரசிறி: ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட வினா இலக்கங்கள் 5 (1), (2)இன்படி, அர்ஜுன் அலோசியஸ், 2014ஆம் ஆண்டிலும் ஜனவரி 2015இன் சில காலங்களிலும் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவர் எனவும் பங்குதாரர் எனவும், பின்னர் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் ஜனவரி 16, 2015இன் பின்னர் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திலிருந்து இராஜினாமா செய்தார் எனவும், ஜனவரி 2015இன் பின்னரும், பேர்பெச்சுல் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் (பேர்பெச்சுவல் கப்பிற்றல் ஹோல்டிங்ஸ், பெர்பெச்சுவல் கப்பிற்றல் தனியார் நிறுவனம்) பணிப்பாளர்களுள் ஒருவராக இருந்தாரெனத் தெரியுமெனவும் கேட்கப்பட்டிருந்தது.

அவ்வினாக்களுக்கான உங்கள் பதில்களில், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவராக அலோசியஸ் இருந்தாரென அறிவீர்களெனவும், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திலிருந்து அலோசியஸ் விலக வேண்டுமெனவும், நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், நிறுவனத்தின் பங்குகளை அவர் கலைத்துவிட வேண்டுமெனவும், அர்ஜுன மகேந்திரனிடம் கூறினீர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதே விடயத்தை, அலோசியஸிடமும் கூறினீர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

மேலதிகமாக, பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளில் அலோசியஸ் எந்தப் பங்கையும் வகிக்க மாட்டாரெனவும், மகேந்திரனால் வழங்கப்பட்ட இந்த உறுதிமொழியை நம்பினீர்களெனவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
இப்போது எமக்குத் தேவையான விளக்கங்கள் என்னவெனில், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களாக பேர்பெச்சுவல் கப்பிற்றல் தனியார் நிறுவனமும் பேர்பெச்சுவல் கப்பிற்றல் தனியார் நிறுவனமும் இருந்தன என்பதை அறிவீர்களா?
பிரதமர்: இல்லை, இந்நிறுவனங்களின் ஹோல்டிங் கட்டமைப்புத் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை.

நீதியரசர் சித்திரசிறி: இந்த ஹோல்டிங் நிறுவனங்களில், ஜனவரி 2015க்குப் பின்னரும், அலோசியஸ், பணிப்பாளர்களுள் ஒருவராகவும் பங்குதாரராகவும் இருந்தாரென நீங்கள் அறிவீர்களா?
 

பிரதமர்: இல்லை, அதை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அலோசியஸ் என்னிடம், இந்த ஹோல்டிங் பங்குகளை, நல்ல விலையில் விற்பதற்குச் சிறிது காலம் தேவையெனக் குறிப்பிட்டிருந்தார். ஒன்று அல்லது இரண்டு பார்ட்டிகளில் நான் அவரைச் சந்தித்திருந்தேன். மென்டிஸ் டிஸ்டில்லரீஸில் தனது கவனத்தைச் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

நீதியரசர் சத்திரசிறி: ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட 10ஆவது வினாவில், நேரடி வைப்பு முறையை உடனடியாக நிறுத்துமாறு, பெப்ரவரி 24, 2015இல், மகேந்திரனுக்கு உத்தரவிட்டீர்களா எனக் கேட்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டம், வெளிப்படைத் தன்மை அற்றது எனவும் சந்தை வாய்ப்புகளை இது ஒடுக்கியது என நீங்கள் கருதியதாலும், பொது ஏல முறையில் திறைசேரிப் பிணைமுறிகளைப் பெறுவதற்கு விரும்பினீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

11ஆவது வினாவில், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்பட, தேவையான நடைமுறைகளை மகேந்திரன் பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
தற்போது எமக்குத் தேவையான விளக்கம் என்னவெனில், நிதிச் சட்டத்தின்படி, மத்திய வங்கியின் கொள்கைகள், நடவடிக்கைகள் தொடர்பானவற்றைத் தீர்மானிக்கும் ஒரே அதிகாரம், மத்திய வங்கி நிதிச் சபையிடம் வழங்கப்பட்டுள்ளது எனவும், நிதிச் சட்டத்தின்படி, மத்திய வங்கியின் கண்காணிப்பு ஆணைக்குழுவுக்கான அதிகாரங்கள், நிதிச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதையும் அறிவீர்களா?

பிரதமர்: அவை தொடர்பில் நான் அறிவேன். ஆனால், அரசாங்கத்தின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் கொள்கைகளைத் தீர்மானிப்பது, அரசாங்கமோ அல்லது அமைச்சரவை அமைச்சர்களோ தான் என்ற, அரசமைப்பின் படி நாங்கள் செயற்பட்டோம். அது, அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இரண்டாவதாக, அரசமைப்பின்படி, அரசைக் கட்டுப்படுத்துவது, நாடாளுமன்றம் ஆகும். ஆகவே இலங்கை மத்திய வங்கி, நாடாளுமன்றத்துக்குப் பதிலளிக்காமல் செயற்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. எனவே, அனைத்து அமைப்புகளும் நாடாளுமன்றத்துக்குப் பதிலளிக்க வேண்டுமென்பதோடு, கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்கள் பலமாக்கப்பட வேண்டும்.

நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன: மகேந்திரனுக்கு நீங்கள் பணிப்புரையை வழங்கிய பின்னர், அந்தப் பணிப்புரையை அமுல்படுத்துவது, இந்த நிறுவனத்தின் (இலங்கை மத்திய வங்கி) நடைமுறைகளுக்கு ஏற்ப நடைபெறுமென எதிர்பார்த்தீர்களா?

பிரதமர்: ஆம், அவர் (மகேந்திரன்) கலந்துரையாடியிருப்பார். ஆனால், நிதிச் சபையில் 3 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் திறைசேரிச் செயலாளர் உட்பட இருவர் அங்கு காணப்பட்டனர். நிதிச் சபையில் அவர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என எனக்குத் தெரியாது. ஆனால், அந்த 3 உறுப்பினர்களும் கூட்டங்களில் கலந்து கொண்டமையால், அதை அறிவார்கள். அதற்கு மேலதிகமாக, நிறுவனங்களை நான் நுண் முகாமை செய்வதில்லை.

நீதியரசர் பிரசன்ன: ஆகவே, அவ்வாறான முடிவொன்று எடுக்கப்படும் போது, மத்திய வங்கியில் வழமையாக முன்னெடுக்கப்படும் நடைமுறைகள் பின்பற்றப்படுமென நீங்கள் எதிர்பார்ப்பீர்களா?

பிரதமர்: ஆம், நான் எதிர்பார்ப்பேன்.

நீதியரசர் சித்திரசிறி: நிதிச் சட்டத்தின்படி, மத்திய வங்கி ஆளுநரின் பிரதான கடமையென்பது, நிதிச் சபையின் முடிவுகளையும் ஏனைய விடயங்களையும் அமுல்படுத்துவது தான் என அறிந்திருந்தீர்களா?

பிரதமர்: ஆம், நான் அறிந்திருந்தேன். அது, மீளக் கொண்டுவரப்பட வேண்டுமென நான் விரும்பினேன். ஏனெனில் முன்னைய அரசாங்கக் காலத்தில், நிதிச் சபையின்படி ஆளுநர் செயற்பட்டிருக்கவில்லை, மாறாக என்ன நடந்தது என்பது தான் நிதிச் சபைக்கு அறிவிக்கப்பட்டது. ஆகவே, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கேற்ப, சட்டத்தின்படி ஆளுநர் செயற்படுவது தொடர்பில் நாம் அர்ப்பணிப்புடன் காணப்பட்டோம். ஆனால், வட்டி வீதங்கள் அல்லது வேறு விடயங்களைத் தீர்மானிப்பதில் நாங்கள் தலையிடுவதில்லை.

நீதியரசர் சித்திரசிறி: பெப்ரவரி 26, 2015 அல்லது 27ஆம் திகதியில், மகேந்திரனை நீங்கள் தொடர்புகொண்டீர்களா என்ற 13ஆவது வினாவின்படி, வீதிச் செயற்றிட்டங்களுக்குத் தேவையான மேலதிக பணத்தைப் பெற முடியுமென, பெப்ரவரி 26, 2015ஆம் திகதி மாலையில், மகேந்திரன் உங்களிடம் தெரிவித்தார். பெப்ரவரி 27, 2015இல் நடைபெற்ற ஏலத்தின் பின்னர், 10.5 பில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளாரென அவர் கூறினாரெனவும் நீங்கள் கூறியுள்ளீர்கள்.
எமக்குத் தேவையான விளக்கம் என்னவெனில், பெப்ரவரி 27ஆம் திகதி நண்பகல் 12.39க்கு, மகேந்திரனின் தொலைபேசியிலிருந்து, ஓர் இலக்கத்துக்கு உங்களுக்கான அழைப்பு வந்தது எனவும், அதன் பின்னர் மகேந்திரனிடமிருந்து மேலும் 3 அழைப்புகள் கிடைத்தன எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த இலக்கத்தில் உங்களைத் தொடர்புகொள்ளலாமா?

பிரதமர்: ஆம். அந்த இலக்கத்தில் நான் தொடர்புகொள்ளப்பட்டேன். பல இலக்கங்களை நான் பயன்படுத்துகிறேன், ஆனால் அன்றைய தினத்தில் இந்த இலக்கத்தில் தான் தொடர்புகொள்ளக் கூடியதாக இருந்தது.

நீதியரசர் பிரசன்ன: அழைப்புகளுக்கு நீங்கள் பதிலளிப்பீர்களா?

பிரதமர்: நானாக அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை. எனது அலுவலக அறையில் நான் பணியாற்றுவதன் காரணமாக, வெளியில் யாராவது இருந்து, தொலைபேசியைச் சோதித்து, அதற்குப் பதிலளிப்பார்.

நீதியரசர் சித்திரசிறி: அந்த நான்கு அழைப்புகளினதும் விவரங்களை ஞாபகப்படுத்த முடியுமா?

பிரதமர்: முதலாவது அழைப்பில், கவலைப்பட வேண்டாமெனவும், தேவையான பணம் திரட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பின்னர் பிற்பகலில் ஓர் அழைப்பில், என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்களைத் தந்ததோடு, 10 பில்லியன் ரூபாயைத் திரட்டியுள்ளனர் என்று குறிப்பிட்டார். அந்த இரண்டு அழைப்புகளும் ஞாபகத்தில் உள்ளன. ஏனைய அழைப்புகள், வேறு விடயங்களுக்காக இருக்கலாம்.

இத்தோடு, நீதியரசர்களின் வினாக்கள் நிறைவுபெற்றன. சட்டமா அதிபரிடம் கேள்விகள் இருந்தால் கேட்க முடியுமென, ஆணையாளர்கள் குறிப்பிட்டனர்.

சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய: மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மகேந்திரன் நியமிக்கப்பட்ட போது ஏற்பட்ட, நலமுரண் தொடர்பில் உங்களிடம் கேள்வியெழுப்பப்பட்டது. சத்தியக் கடதாசியின் 21ஆவது வினாவுக்கான உங்கள் பதிலில் நீங்கள், உங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பில், அர்ஜுன மகேந்திரன், சரியாகச் செயற்பட்டாரென நம்பியதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால், பெப்ரவரி 27, 2015இல் நடைபெற்ற ஏலத்தின் பின்னரும், அதன் பின்னர் மார்ச் 21, 31ஆம் திகதிகளின் பின்னரும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஜூன் 2016இல் நாடாளுமன்றத்தில் வைத்து, அறிக்கையொன்றை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து, நலமுரண்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இருந்தன.
எந்தப் பின்னணியில் வைத்து, உங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் நம்பிக்கை வைத்தீர்கள்? இந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்ததா?

பிரதமர்: பெப்ரவரி மாத இறுதியில் நடந்தது. ஜனவரியில் நான் அவரோடு பேசினேன், அப்போது, பேர்பெச்சுவர் ட்ரெஷரீஸிலிருந்து அலோசியஸ் இராஜினாமா செய்கிறார் எனக் கூறப்பட்டது. அதை அவர் செய்திருந்தார். பணிப்பாளர் பதவியிலிருந்து அவர் விலகியிருந்தார். மென்டிஸ் டிஸ்டில்லரீஸை மேம்படுத்துவதில் தனது நேரத்தைச் செலவிடப் போகிறாரெனவும் கூறப்பட்டது. ஓரிரு உற்பத்திகளை என்னிடம் காட்டி, என்னுடன் உரையாடியிருந்தார். ஆனால் இது தொடர்பில் உரையாடியிருக்கவில்லை. ஆனால், இவ்வளவும் தான் எனக்குத் தெரிவித்தார். அவரிடம் பங்குகள் இருந்தன எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அர்ஜுன மகேந்திரனும் என்னிடம் இதே விடயத்தையே கூறினார்.

நலமுரண் என்பது, நான் ஆரம்பத்திலேயே எழுப்பிய விடயமாகும். ஏனெனில், முன்னாள் ஆளுநரின் சகோதரியும், பேர்பெச்சுவர் ட்ரெஷரீஸில் உறுப்பினராக இருந்தார். அதனால் நாம் தான், நலமுரண் எதுவும் இருக்கக்கூடாது எனவும் இராஜினாமா செய்யுமாறும் கூறினோம். இது நடந்த பின்னர், காமினி பிட்டிபன செயற்குழுவை நியமித்து, அக்குழு விசாரண செய்தது. ஆளுநர், விடுறையில் சென்றார். ஏதாவது பிழை நடந்திருந்தால், ஆளுநர் இராஜினாமா செய்திருக்க வேண்டும், ஆனால் அவருக்கெதிராக எதுவும் இருந்திருக்கவில்லை.

நிதியமைச்சர் தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே எழுப்பிய விடயங்களும் காணப்பட்டன. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் எவற்றிலும், அப்படி ஏதும் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால் அமைச்சரிடம் (அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க) நான் கேட்டேன். அமைச்சர் இல்லை என்றார். அதை நான் ஏற்றுக் கொண்டேன்.

ஏனென்றால், மஹிந்தானந்த அளுத்கமகேக்கு எதிராக விசாரணையொன்று நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது, அதன் ஆவணம், உங்கள் திணைக்களத்துக்கு வந்துள்ளது. அவருக்கெதிராக நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் (கேலியான குரலில்)

சட்டமா அதிபர்: ஆக, அர்ஜுன மகேந்திரன் வழங்கிய உறுதிமொழிகளைப் பின்பற்றினார் என்பது தொடர்பான விசேடமான தகவலேதும் இல்லை?

பிரதமர்: என்னை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தினார் என்று என்னிடம் தகவல்கள் இருந்திருக்கவில்லை. பிட்டிபன ஆணைக்குழுவிடமும் அவ்வாறான தகவல் இருக்கவில்லை. கோப், சில கருத்துகளை வழங்கியிருந்தாலும், அவ்விடயத்தில் எதுவும் கண்டுபிடித்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

சட்டமா அதிபர்: இப்படியான கேள்விகள், குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்த பின்னணியில், இவ்விடயங்கள் எப்படிப் போகின்றன என ஆராயுமாறு, மகேந்திரனுக்குப் பணிப்பரை விடுக்க வேண்டுமென, எத்தருணத்திலாவது சிந்தித்தீர்களா?

பிரதமர்: பிட்டிப்பன செயற்குழு முடிவடைந்த பின்னர், என்ன செய்ய வேண்டுமென எனக்குச் சொல்லுமாறு, நாடாளுமன்றத்திடம் நான் கொடுத்தேன். ஆகவே, நாடாளுமன்றத்திடம் அது வந்த பின்னர், அதில் நான் தலையிட விரும்பவில்லை.

சட்டமா அதிபர்: அரச வங்கிகள் ஒன்றிணைந்து, 2016ஆம் ஆண்டு மார்ச் 29, 31ஆம் திகதிகளில் பிணைமுறி ஏலங்களில் குறைந்த நெகிழ் வீதத்தில் கோருமாறு எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக உங்களுக்கு எப்போதாவது தெரியப்படுத்தப்பட்டதா?

பிரதமர்: இல்லை. அவ்வாறான கொள்கை முடிவு எடுக்கப்படவில்லை. ஊக அடிப்படையிலான ஏலத்தில் ஈடுபட வேண்டாமெனவும் ஊக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறும், அரச வங்கிகளுக்குக் கூறப்பட்டது. அதைத் தாண்டி, சந்தைக்கு நேயமான முடிவுகளை எடுப்பதே எமது கொள்கையாக இருந்தது.

சட்டமா அதிபர்: 14ஆவது வினாவுக்கான உங்களது பதிலின்படி, சி.பி.ஆர். பெரேராவுடனும் இன்னோர் அதிகாரியுடனும் இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அக்கூட்டத்திலும் கூட, அவ்வாறான கொள்கை முடிவு அறிவிக்கப்படவில்லையா? இல்லாவிடின், அவ்வாறான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கவில்லையா?

பிரதமர்: இல்லை, நிதி விவகாரங்கள் தொடர்பாகவே நாங்கள் பேசினோம். வங்கிக் கண்காணிப்புப் பிரிவு பலவீனமாக இருப்பது பற்றிய ஒரு விடயமே காணப்பட்டது.

இதுதான் முதல் தடவை

பதவியிலிருக்கும் போது, பிரதமர் ஒருவர், ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜரானமை இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு,  மத்திய வங்கி பிணைமுறிகள் சர்ச்சை தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.

அந்த அறிவுறுத்தலுக்கு அமைய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்றுக்காலை 9:50க்கு ஆஜராகினார். சுமார் 1 மணி 45 நிமிடங்கள் ஆணைக்குழுவில் அவரிருந்தார்.

ஆணைக்குழுவின் நடவடிக்கைககள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகின. ஆரம்ப நடவடிக்கைகளை நிறைவடைந்ததன் பின்னர், பிரதமர் ரணிலிடம் தெளிவுப்படுத்திக்கொள்வதற்கான கேள்விகள், காலை 10:15க்கு கேட்பதற்கு ஆரம்பிக்கப்பட்டன.

பிரமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியன்று, ஆணைக்குழுவால் அனுப்பிவைக்கப்பட்ட 28 கேள்விகளுக்குக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்பட்ட 20 கேள்விகளுக்குமான பதில்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சத்தியக்கடதாசியின் ஊடாக அனுப்பிவைத்திருந்தார்.

அந்தப் பதில்களுக்கான தெளிவுப்படுத்தல்களைக் கோருவதற்கே, பிரதமர் நேற்றையதினம் அழைக்கப்பட்டிருந்தார். அவர், தன்னுடைய விளக்கங்களை வழங்கிவிட்டு, காலை 11:35 மணியளவில், ஆணைக்குழுவை விட்டு வெளியேறிவிட்டார்.


'மகேந்திரனை நம்பினேன்'

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.