2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

‘மௌன காலத்தில் கமெராக்களே கண்காணிக்கும்’

Editorial   / 2019 நவம்பர் 14 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று (13) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தன. அந்த மௌன காலத்தில், தேர்தல் சட்டங்களை மீறி செயற்படுபவர்கள், காணொளியின் ஊடாக இனங்காணப்பட்டு கைதுசெய்யப்படுவர்  என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறிய ஊடகப்பேச்சாளர், “மௌன காலத்தில் வேட்பாளர்களை மேம்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது. பேரணிகள், வீடுகளுக்குச் சென்று பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது” என்றும் தெரிவித்தார். 

“அத்துடன், சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட்டு பாரதூரமான விடயங்கள் அவதானிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

“பொதுமக்கள், எந்தவித அழுத்தங்களுமின்றி சுதந்திரமான தீர்மானத்தை மேற்கொண்டு வாக்களிப்பதற்கும், தேர்தலை அண்மித்த நாள்களில் நாட்டின் அமைதியைப் பேணுவதற்கும் இந்த மௌன காலம் அமுல்படுத்தப்படுவதுடன், தேர்தல் பெறுபேறுகள் வெளியாகிய பின்னர் சுமார் ஒரு வாரம் வரையிலும், பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவற்றை முன்னெடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதேவேளை, “குறித்த காலத்தில் விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரங்கள், பேரணிகள் உள்ளிட்ட நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் கமெராவுடன் தயாராக இருக்கும் பொலிஸார் அதனை காணொளியாக பதிவுசெய்வார்கள். அதன்பின்னர் அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்படுவார்கள். இவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்கவும் முடியும்” என்றார்.

இதேவேளை,   “பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன்  பொலிஸ் தலைமையகத்தில் இருந்து 9 மாவட்டங்களுக்கு 9 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அனுப்பிவைக்கப்படவுள்ளனர்” எனத் தெரிவித்த ஊடகப் பேச்சாளர், “தேர்தல் பெறுபேறுகள் வெளியாகும் வரை அவர்கள் அங்கு பணிகளை முன்னெடுப்பார்கள்” என்றார்.

“வாக்காளர் எண்ணிக்கை, பிரதேசம், வசதிகளைக் கருத்திற்கொண்டு கிளிநொச்சி, மன்னார், பொலன்னறுவை, கேகாலை, மாத்தளை, மொனராகலை, மட்டக்களப்பு,  முல்லைத்தீவு, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்தப் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பவார்கள்” என்றும், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .