'வடக்கில் சிங்களக் குடியேற்றத்துக்கு இடமில்லை்'

-ஜே.ஏ.ஜோர்ஜ்

வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி, இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க, ஒருபோதும் தான் இடமளிக்கப் போவதில்லையென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07), பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, பிரதமர் இதனைக் கூறினார்.

இதன்போது சார்ல்ஸ் எம்.பி, “நஞ்சுண்டான் குளத்தைப் புனரமைப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் அனுமதி மறுக்கின்ற வனவனப் பாதுகாப்புத் திணைக்களம், வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேச சபைக்கு உட்பட்ட கச்சல் சமனங்குளத்தைப் புனரமைத்து, வவுனியா கமநல திணைக்களத்துக்கு அண்மித்த பகுதியின் சுமார் 250 ஏக்கர் காட்டை அநுராதபுர கமநல திணைக்களத்தின் ஊடாக அழித்து, அங்கு சிங்கள மக்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதை பிரதமர் அறிவாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், “வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அதிகார சபை, தொல்லியல் திணைக்களங்கள் என்பவற்றில், இப்பகுதி தொடர்பான விடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டு, எதிர்காலத்தில் சிங்கள மக்களைக் குடியேற்றும் வகையில் அவை கையாளப்படுவதை பிரதமர அறிவாரா?” என்று கேள்வி ஏழுப்பிய சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி, அவ்வாறு நடந்தால், அதனைத் தடுத்த நிறுத்த முடியுமா என்பதை, சபையில் பிரதமர் அறிவிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், “சார்ஸ் நிர்மலநாதன் கூறியதைப் போன்று, வவுனியா - நெடுங்கேணி பிரதேசத்தில், வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் முகாமைத்துவத்தில் உள்ள பகுதியிலுள்ள கச்சல் சமனங்குளத்தை புனரமைத்து, அங்கு சிங்கள மக்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார்.

அத்துடன், கச்சல் சமனங்குளத்தைப் புனரமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், கடந்த காலத்தில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, புனரமைக்கப்பட வேண்டிய குளங்களின் பட்டியலில், கச்சல் சமனங்குளம் என்ற பெயர் உள்ளடக்கப்படவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“குறித்த பகுதியில் மக்களைக் குடியமர்த்துவதற்காக எந்தவித இடங்களும் வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் ஒதுக்கப்படவில்லை. எந்தவொரு பிரதேசத்திலும் காணப்படும் இனப்பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதியில் பெரும்பான்மையாக தமிழ் மக்களே உள்ள நிலையில், தமிழ் மக்களையே அங்கு மீள்குடியேற்ற எதிர்பார்த்துள்ளோம். இதனை மீறி செயற்படும் அதிகாரிகள் இருந்தால் அவர்கள் தொடர்பில் தகவல் தாருங்கள் நாங்கள் விசாரணைகளை முன்னெடுக்கின்றோம்” என்றும் பிரதமர் கூறினார்.

மேலும், “முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, நஞ்சுண்டான் குளத்தைப் புனரமைப்பதற்கான அனுமதி, வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு, 2019 ஏப்ரல் 10ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற கூட்டங்களிலும் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான ஆலோசனைகள், வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டன. அத்துடன், எனது அமைச்சின் ஊடாக 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்த பின்னர், மேலும் தேவைப்படும் நிதி பெற்றுக்கொடுக்கப்படும்” என்றும் பிரதமர் கூறினார்.

எவ்வாறாயினும், நஞ்சுண்டான் குளத்தைப் புனரமைத்து,  பிரதேச மக்களுக்கே ஒப்படைப்பதாகவும், பிரதமர் வாக்குறுதி அளித்ததோடு, தவிர, எந்த மாவட்டத்திலும் இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்கத் தான் ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லையென்றும் தெரிவித்தார்.


'வடக்கில் சிங்களக் குடியேற்றத்துக்கு இடமில்லை்'

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.