’1981 தேர்தலே ஆயுதக்குழுக்களின் உருவாக்கத்துக்குக் காரணம்’

சரியான நேரத்தில் தேர்தலை நடத்துவதன் ஊடாக, ஜனநாயகம், வாக்குரிமை, மற்றும் நாட்டு மக்களின் இறைமையைப் பாதுகாக்க முடியுமெனவும், அவ்வாறு தேர்தல்கள் நடைபெறாத சந்தர்ப்பத்தில் அது அழிவுக்கு வழிவகுக்கும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்காளர் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அநுராதபுர மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற, "வாக்களிக்கும் உரிமையிலேயே ஜனநாயகம் தங்கியுள்ளது" என்ற தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்  "இலங்கை வரலாற்றில் மோசடிகள் நிறைந்த மூன்று தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 1999ஆம் ஆண்டு நடந்த வடமேல் மாகாணசபைத் தேர்தல். 1982இல் நடந்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு. 1981இல் நடந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் ஆகியனவே  அவை." எனக் குறிப்பிட்டார்.

முதலாவது தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட அவர், "யாழப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது, வாக்களிப்பு நிலையங்களில் கொழும்பு, குருநாகல் பகுதிகளில் இருந்து, கொண்டுவரப்பட்டவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இந்த விடயம் வாக்குப்பெட்டிகள் காணாமற்போக காரணமாக அமைந்தன. பின்னர் சில வாக்குப்பெட்டிகள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அன்றே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவம், தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் தேர்தல் மீதான நம்பிக்கையை உடைந்தது. "வாக்குகளுக்குப் பதில் ரவைகள்" என்ற நிலைக்கு அவர்கள் செல்ல வழியமைந்தது.

வடக்கில் ஆயுதக் குழுக்கள் பலமடைய, 1983 கலவரமே காரணமானது என்று சிலர் கருதுகிறார்கள். அது உண்மைதான் எனினும்,  1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலே காரணமென தான் நான் நினைக்கிறேன்" என வலியுறுத்தினார்.

மேலும், அடுத்தத் தேர்தல் தொடர்பில் கருத்துரைத்த அவர், "1982 ஜனாதிபதிப் தேர்தலில், இளைஞர்களைப்  பிரதிநிதித்துவம் செய்த அரசியல்  கட்சி ஒன்று பெற்றுக்கொண்ட வாக்குகளை வைத்துப் பார்த்தால், 1983இல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டிருக்குமானால் அந்தக் கட்சிக்கு 5 தொடக்கம் 10 ஆசனங்கள் கிடைத்திருக்கும்.

ஆனால் இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படாததால் அவர்கள் தேர்தலின் மீது நம்பிக்கையிழந்தனர். இது அவர்களில் சிலர் ஆயுதம் ஏந்த வழியமைத்தது. இதன் தொடர்ச்சியாக 60 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்." எனக் குறிப்பிட்டார்.

1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம், அப்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தை ஐந்தில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீடித்தது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜயவர்தன, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி, புதிய தேர்தலை எதிர்கொண்டார். அது அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணம்.

 

வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தி, அங்குள்ள வாக்காளர்கள் தமது விருப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கடப்பாடு  ஆகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


’1981 தேர்தலே ஆயுதக்குழுக்களின் உருவாக்கத்துக்குக் காரணம்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.