Menaka Mookandi / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 கொடிய தொற்றினால் முழு உலகமும் பெரும் அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்துள்ள போதிலும், அரசாங்கம் என்ற ரீதியில், இந்து மதத்தின் விழுமியங்களைக் காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பாகுமென, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
நவராத்திரியை முன்னிட்டு, இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 40 இந்துக் கோவில்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்வு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (15) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பொது, குறியீட்டு ரீதியாக 10 கோவில்களின் பரிபாலன சபைத் தலைவர்களுக்கான நிதியுதவிகளை, பிரதமர் வழங்கி வைத்தார்.
இதன்போது அங்கு உரையாற்றிய பிரதமர், “இவ்வாறானதொரு நெருக்கடியான காலப்பகுதியில், நாம் இந்துக் கோவில்களுக்குத் தலா 50,000 ரூபாய் நிதியைப் பெற்றுக் கொடுத்து, சமய விழுமியங்களை பாதுகாப்பதுடன், நாட்டின் நலனுக்காகப் பிரார்த்திப்பதற்கும், இச்சந்தர்ப்பத்தை வாய்ப்பாக்கிக் கொள்கிறேன்” என்றார்.
“சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், இந்து மதத்தையும் இந்து மதத்தின் விழுமியங்களையும் காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பாகும்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
“ஆரம்பிக்கும் அத்தனைக் காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில், நற்காரியங்களைத் தொடங்கும் இந்த நவராத்திரிக் காலப்பகுதியில், இந்த புண்ணிய நிகழ்வை ஆரம்பித்திருக்கின்றோம்.
கொவிட்-19 தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில், கோவில்களில் இடம்பெறும் திருவிழாக்களின் போது, அனைவரும் சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றிச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என, பிரதமர் மேலும் கூறினார்.
இந்நிகழ்வில், கடற்றொழில்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் பதுளை மாவட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ரமேஸ்வரன், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்த சாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.




1 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Oct 2025