2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பரிஸ் ஸா ஜெர்மனை வென்றது பெயார்ண் மியூனிச்

Editorial   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், பெயார்ண் மியூனிச், பார்சிலோனா, ஜுவென்டஸ், மன்செஸ்டர் யுனைட்டெட், றோமா ஆகிய அணிகள் வென்றதோடு, செல்சி, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச், 3-1 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மனை வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, கொரென்டின் டொலிஸோ இரண்டு கோல்களையும் றொபேர்ட் லெவன்டோஸ்கி ஒரு கோலையும் பெற்றனர். பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே பெற்றிருந்தார். இப்போட்டியில் தோற்றிருந்தாலும் மேம்பட்ட கோல் வித்தியாசம் காரணமாக தமது குழுவின் வெற்றியாளர்களாகவே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் செல்லுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த குழுவிலிருந்து இரண்டாவது அணியாக பெயார்ண் மியூனிச் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குச் செல்கிறது.

ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா, 2-0 என்ற கோல் கணக்கில், போர்த்துக்கல் கழகமான ஸ்போர்ட்டிங் லிஸ்பனை வென்றது. பார்சிலோனா சார்பாக ஒரு கோலை பக்கோ அல்கேஸர் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைத்திருந்தது.

இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், 2-0 என்ற கோல் கணக்கில் கிரேக்கக் கழகமான ஒலிம்பியாகோஸை வென்றது. ஜுவென்டஸ் சார்பாக ஜுவான் குவராடோ, பெடெரிக்கோ பெர்னார்டெஷி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இப்போட்டியில் வெற்றதன் மூலம் தமது குழுவிலிருந்து இரண்டாவது அணியாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு ஜுவென்டஸ் தகுதிபெற்றது. இக்குழுவின் வெற்றியாளர்களாக, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு பார்சிலோனா ஏற்கெனவே தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், 2-1 என்ற கோல் கணக்கில், ரஷ்யக் கழகமான சி.எஸ்.கே மொஸ்கோவை வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, றொமேலு லுக்காக்கு, மார்க்கஸ் றஷ்போர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சி.எஸ்.கே மொஸ்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை விட்டின்ஹோ பெற்றார். அந்தவகையில் தமது குழுவின் வெற்றியாளர்களாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் மன்செஸ்டர் யுனைட்டெட் நுழைந்துள்ளது.

இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான றோமா, 1-0 என்ற கோல் கணக்கில், அஸர்பைஜான் கழகமான குவாரபக்கை வென்றது. றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை டியகோ பெரோட்டி பெற்றனர். இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் தமது குழுவின் வெற்றியாளர்களாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு றோமா செல்கிறது.

இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சி, ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை சாவுல் நிகூஸ் பெற்றதோடு, செல்சியின் கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. அந்தவகையில் இப்போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டதால், றோமாவுக்கு அடுத்ததாக இரண்டாவது அணியாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு செல்சி செல்கிறது. மறுப்பக்கம், கடந்த சம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிப் போட்டி வரை வந்த அத்லெட்டிகோ மட்ரிட், சம்பியன்ஸ் லீக்கிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .