2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

றியல் மட்ரிட், சிற்றி வென்றன

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், நாப்போலி, ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளதுடன், லிவர்பூல், செவில்லா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 6-0 என்ற கோல் கணக்கில், சைப்ரஸ் கழகமான அப்போயல் நிக்கோஸியாவை வென்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுக் கொண்டது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா 2 கோல்களையும் லூகா மோட்ரிட், நாச்சோ மொன்றியல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, 1-0 என்ற கோல் கணக்கில், நெதர்லாந்துக் கழகமான பெய்னூர்ட்டை வென்று, இன்னுமொரு குழுநிலைப் போட்டியிருக்கையிலேயே தமது குழுவின் வெற்றியாளர்களாக தம்மை உறுதிப்படுத்திக் கொண்டது. மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ரஹீம் ஸ்டேர்லிங் பெற்றார்.

இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும், 2-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியக் கழகமான பொரிசியா டொட்டமுண்டை வென்று, இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தமது குழுவில் முதல்நிலையை உறுதிப்படுத்திக் கொண்டது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, ஹரி கேன், சொன் ஹியூங் மின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொரிசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை பியரி எம்ரிக் அபுமெயாங் பெற்றார்.

இத்தாலி சீரி ஏ கழகமான நாப்போலி, 3-0 என்ற கோல் கணக்கில், உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெஸ்டைக்கை வென்றது. நாப்போலி சார்பாக, லொறென்ஸோ இன்சீனியா, பியோத்தர் ஸிலின்ஸ்கி, ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

ஜேர்மனியக் கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக், 4-1 என்ற கோல் கணக்கில், பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோவை வென்றது. ஆர். பி லெய்ப்ஸிக் சார்பாக, டிமோ வேர்ணர் இரண்டு கோல்களையும் நபி கெய்ட்டா ஒரு கோலையும் பெற்றதோடு, மற்றையது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றது. மொனாக்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை றடமெல் பல்காவோ பெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை மொனாக்கோ இழந்தது.

இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல், ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லா ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாக, றொபேர்ட்டோ பெர்மினோ 2 கோல்களைப் பெற்றதோடு, சாடியோ மனே ஒரு கோலைப் பெற்றார். செவில்லா சார்பாக, விஸாம் பென் யெடர் 2 கோல்களையும் குய்டோ பிஸாரோ ஒரு கோலையும் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .