Suganthini Ratnam / 2016 ஜூலை 13 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
அதிகாரங்களை மத்திய அரசாங்கம் குவித்துக்கொள்ளாமல் பிராந்திய, மாகாண மட்டங்களுக்கு முறையாக பகிர்ந்தளிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறமுடியும் என்பதுடன், இதன் மூலம் இந்த நாட்டில் நீடித்த, நிலையான சமாதானத்தை எட்ட முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வுகூடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்த நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழாமல், முழுமையான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்பதற்காக யுத்தம் நடைபெற்றது. தற்போது அந்த யுத்தம் முடிவுற்றுள்ளது. இருந்தபோதிலும், அந்த யுத்தத்துக்கான நியாயமான காரணங்கள் இன்னமும் இருந்துகொண்டிருக்கின்றன.
எமது பூர்வீக மண்ணில் நாங்கள் சுதந்திரமாக, சமத்துவமாக வாழ வேண்டுமாகவிருந்தால் வடக்கு, கிழக்கு இணைந்த நிலையில் சமஷ்டி மூலமான தீர்வே அதற்கு வழிகோலும். அதனைவிட அரைகுறை தீர்வுத்திட்டங்கள் எமது உரிமைப் பசியை தீர்த்துவிடாது' என்றார்.
'சர்வதேச ரீதியான அழுத்தங்கள், உள்நாட்டு ரீதியான கலந்துரையாடல்கள் நடைபெற்றுவரும் இந்த வேளையில் சமஷ்டி தீர்வு எங்களது தலைவிதியை நாங்களே தீர்மானிக்கும் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, உலக நாடுகளில் எந்த நாட்டிலும் இந்த சமஷ்டி தோற்றதாக வரலாறு இல்லை.
ஒற்றையாட்சி முறை என்பது பல துயரப் பதிவுகளை ஏற்படுத்திக்கொண்டன. பெரும்பான்மையினம், சிறுபான்மையினத்தை வதைக்கும் ஆட்சியாகவே அதனை வரலாறுகள் கூறுகின்றன. இன வன்முறைகளால் மக்கள் அழிக்கப்படுவதற்கும் நாட்டை விட்டு விரட்டப்படுவதற்கும் இந்த ஒற்றையாட்சி முறை வழிகோலியுள்ளது.
அதிகாரங்களை மத்திய அரசாங்கம் குவித்துக்கொள்ளாமல் பிராந்திய, மாகாண மட்டங்களுக்கு முறையாக பகிர்ந்தளிப்பதன் மூலம் இனப்பிரச்சினைகான தீர்வைப் பெறமுடியும். அதன் மூலம் இந்த நாட்டில் நீடித்த நிலையான சமாதானத்தை ஏற்படுத்தமுடியும் என இலங்கையில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் உணரவேண்டும்' என்றார்.
'மாறாக, சர்வதேச ரீதியான பொறிமுறைகள், குற்ற விசாரணைகள் தேவையில்லையெனக் கூறுவதும் ஒருபக்கச்சார்பான பேரினவாத நிலைப்பாடாகவே இருக்குமேயொழிய மறுக்கப்பட்ட நீதிகளுக்கு சரியான தீர்ப்புகள் கிடைப்பதற்கு சர்வதேச ரீதியான பொறிமுறை கட்டாயமாக தேவையென்பது நடுநிலையானவர்களின் கருத்தாக இருந்துவருகின்றது.
கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தேவைப்பாடுகளை நிவர்த்திசெய்வதற்கு மத்திய அரசாங்கத்தில் குவிக்கப்பட்டுள்ள எந்த அதிகாரங்களும் பயனளிக்காது. யுத்தம் நிறைவுசெய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும், அந்த யுத்தத்தின் வடுக்களை சுமந்ததாக இந்த பிரதேசங்கள் இன்றும் இருந்துவருகின்றன' எனவும் அவர் மேலும் கூறினார்.


32 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
38 minute ago
46 minute ago