2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

'அதிக வட்டிக்கடன் சுமையிலிருந்து மீள வாகரைப் பிரதேச மக்களுக்கு வழியேற்பட்டுள்ளது';

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வாகரைப்  பிரதேச மக்கள் அதிக வட்டியுடனான  கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்குத் தற்போது வழி ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.

வாழ்வாதார வழிமுறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு 'வியாபாரத் திட்டமிடல்'  சந்தைக் கண்காட்சி, வாகரைப் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (14)  ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,  'இதுவரை காலமும் இப்பிரதேசத்தில் சில நிறுவனங்கள் உள்நுழைந்து சுமார் 26 சதவீதம் என்ற அதிகரித்த வட்டி வீதத்தில் கிராம மக்களுக்கு கடன் வழங்கி, மக்களைச் சுரண்டி கடன் சுமைக்கு உள்ளாக்கியிருந்தன.

இந்த நிலைமையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு கடந்த இரண்டு வருடங்களாக நாம் அயராது பாடுபட்டோம்.
கரையோரம் பேணல் திணைக்களம் உள்ளிட்ட இன்னும் சில நிறுவனங்கள் மக்களை அதிக வட்டிக்குக் கடன் பெறும் சுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு பங்காற்றியுள்ளன.

மக்கள் தங்களுக்கு ஏற்படும் அதிக வட்டிப் பாதிப்பை உணர்ந்துகொண்டதால், பாரியளவு வெற்றி கிட்டியுள்ளது. அதன் வெளிப்பாடே இன்றைய கண்காட்சியாகும்' என்றார்.

'சுனாமிப் பாதிப்பு, போர்க்காலத்தில் கணவனை இழந்தவர்கள், தொழிற் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்று சுமார் 300 குடும்பங்கள் சிறுகைத்தொழில் கடன் முயற்சியில் தங்களை இணைத்துக்கொண்டு இப்பொழுது அதில் வெற்றி கண்டுள்ளன.
கடன் கொடுக்கும் நிறுவனங்களின் வட்டி வீதம் பற்றிய விழிப்புணர்வு பற்றிய வியாபாரத் திட்டமிடலின் பயனாக இந்த வெற்றி அடையப் பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெற்ற பயனாளிகளான ஏழை  மக்கள் இப்பொழுது விழிப்படைந்துள்ளார்கள்.

இதனால், அதிக வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனங்களை இப்பொழுது மக்கள் புறக்கணித்துள்ளனர்.

வியாபாரத் திட்டத்தின் ஊடாக கிராம மக்கள் தங்கள் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டப்பட்டுள்ளார்கள்.
கரையோரம் பேணல் திணைக்களத்தினால் சமூக மட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றில் 7 அமைப்புகள் சமூக சேவைத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு,  ஒவ்வொரு அமைப்புக்குமாக தலா 4 இலட்சத்து 75 ரூபாய் நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

இது வட்டி இல்லாக் கடன் சுழற்சி முறை மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.

அதிக வட்டிச் சுமையிலிருந்து மீள, கடன் பெற, வியாபாரத்தை விரிவுபடுத்த, சேமிப்பை அதிகரிக்க, இத்திட்டம் பயனளிக்கிறது.

கிராம மக்கள் தங்கள் வியாபாரத்தின் திட்டத்தைத் தயாரித்து உற்பத்தியை மேம்பாடடையச் செய்வதே நோக்கமாகும்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--