2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு; பாடசாலைகளை மூடும் அபாயம்

Suganthini Ratnam   / 2016 மே 30 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, கல்குடாக் கல்வி வலயத்தில் ஏற்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக அவ்வலயத்திலுள்ள பாடசாலைகள் சிலவற்றை மூட வேண்டிய அபாயம் ஏற்பட்டு வருவதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

இவ்வலயத்தில் ஏற்கெனவே 300 ஆசிரியர்கள் தேவையாக இருந்தனர். மாகாணக் கல்வித் திணைக்களத்தால் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தின் கீழ், கல்குடாக் கல்வி வலயத்திலிருந்து 123 பேர் ஏனைய கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர்.

இவர்களில் 43 பேரே பதில் ஆசிரியர்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 12 முதல் 18 வருடங்களாக இவ்வலயத்தில் கடமையாற்றிய ஏனைய 80 பேரும் பதில் கடமை ஆசிரியர்கள் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கல்குடாக் கல்வி வலயத்துக்கு ஏனைய வலயங்களிலிருந்து 39 ஆசிரியர்கள் கடந்த மாதம்  வழங்கப்பட்டனர். இருப்பினும், இவர்கள் மேல்முறையீடு மேற்கொண்டதன் அடிப்படையில் 11 பேர் வழங்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னமும் எமது வலயத்துக்கு வருகை தரவில்லை.

எனவே, இவ்வலயத்தில் ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதால், மேற்படி 39 பேரில் 11 பேர் தவிர, ஏனையோரின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் கல்குடாக் கல்வி வலயத்துடன்; இணைப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பாரிய ஆசிரிய நெருக்கடியால் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம், செங்கலடி மத்திய கல்லூரி, சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம், களுவன்கேணி  விக்னேஸ்வரா வித்தியாலயம், வாழைச்சேனை இந்துக் கல்லூரி, பால்சேனை ஜீ.ரி.எம்.எஸ் ஆகிய பாடசாலைகளில் சுமூகமான முறையில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. ஆசிரியர்கள் இன்மை காரணமாக  மாணவர்கள் பாடசாலைகளில் கற்றலின்றி இருக்க வேண்டிய நிலைமை உள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .