2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

‘இந்தியா முன்வந்தால் சீனாவுக்கு அவசியமில்லை’

வா.கிருஸ்ணா   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா முன்வந்து, வடக்கு, கிழக்கில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது, இங்கு சீனா வரவேண்டிய அவசியம் இருக்காது என்பதை, இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். இந்தியாவிலுள்ள இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகளை, இலங்கைக்கு அழைத்துவந்து, அவர்களுக்கான தேவைகளையும் நிறைவேற்றிக்கொடுக்க இந்தியா முன்வரவேண்டுமென்ற கோரிக்கையையும் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு, மீன்பிடியை மேம்படுத்தும் வகையில், மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு, நேற்று (18) நடைபெற்றது.

வியாழேந்திரன் எம்.பி, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், இந்த வலைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வலைகளை வழங்கிவைத்து உரையாற்றும் போதே, வியாழேந்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த பகுதிகளிலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய எம்.பி, "இன்று, மேய்ச்சல் தரைக்குள் வன இலகாவும் வனஜீவராசிகள் திணைக்களமும், பொலிஸாரின் உதவியுடன் கால்நடை வளர்ப்போரைக் கைதுசெய்யும் நிலையிருந்து வருகின்றன" எனக் குறிப்பிட்டார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மூன்று இலட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் காணப்படுகின்றனவெனக் குறிப்பிட்ட அவர், அந்தக் கால்நடைக்குரிய மேய்ச்சல் தரையை உறுதிப்படுத்தவேண்டிய அவசியம் உள்ளதெனவும், வாகரை, கிரான், வவுணதீவு, வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அதிகளவான கால்நடைகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, அவர்களின் கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் தரை, வர்த்தமானியில் அறிவிக்கப்படவேண்டுமென அவர் கோரினார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலமீட்புப் போராட்டத்தை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட வியாழேந்திரன் எம்.பி, இன்று சிலர், அபிவிருத்தி மட்டுமே தமக்குத் தேவையென்னும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

எனினும், அபிவிருத்திக்காக இந்த நாட்டில் தமிழ் மக்கள் போராடவில்லையென்றும் அதற்காக இழப்புகளைச் சந்திக்கவில்லையென்றும், ஒரு கிறவல் வீதிக்கும் கொங்கிறீட் வீதிக்கும் தமிழ் மக்கள் ஆயுதம் தூக்கிப் போராடவில்லையென்றும் குறிப்பிட்ட அவர், இந்த மண்ணுக்காகவே இவ்வளவு போராட்டங்களையும் நடத்தி, இவ்வளவு இழப்புகளையும் சந்தித்தாகவும் என்றார்.

போராட்டக் காலங்களில் பாதுகாக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலங்கள், இன்று ஆயிரக்கணக்கில் அபகரிப்புச் செய்யப்படுகின்றன எனக் குற்றஞ்சாட்டிய வியாழேந்திரன் எம்.பி, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில், 2,000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் பறிபோகும் நிலையேற்பட்டுள்ளதெனவும், பல விதங்களிலும் காணிகளைப் பாதுகாக்கவேண்டி, போராட வேண்டிய நிலைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--