2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஒருமித்த கருத்துகளுடன் செயற்பட முன்வருமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 மே 22 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

அரசியல் தலைமைகளுக்கு அப்பால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பேசும் மக்கள், ஒருமித்த கருத்துகளுடன் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் எனக் கிராமியப்  பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

களுவாஞ்சிக்குடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  மகிழூர் மற்றும் பெரியகல்லாறுப் பகுதிகளில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளுக்கான திறப்பு விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை நடைபெற்றன. பெரியகல்லாறில் நடைபெற்ற ஆடைத் தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.  

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'தற்போதைய காலகட்டத்தில் பாரிய சவால்களுடன் வாழும் நிலைமை சிறுபான்மையினச் சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ளது. தேசியத்தில் பௌத்த பெரும்பான்மை இனவாதத்துடன் முட்டிமோதும் நிலைமைக்குச் சிறுபான்மையினம் தள்ளப்பட்டுள்ளது.

கடந்தகால ஆட்சியை தூக்கியெறிந்த பின்னரும் கூட, அந்த விடயங்கள் இந்த நல்லாட்சியிலும் தொடர்கின்றன என்பதை அண்மைய நிகழ்வுகள் தெட்டத்தெளிவாக நிரூபிக்கின்றன' என்றார்.

'சிறுபான்மையினங்களாகிய இரண்டு சமூகங்களும்; ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற விடயத்தை மறைமுகமாக எமக்கு அவர்கள் சொல்லித் தருகின்றனர். இந்த மாவட்டத்தில் வாழும் நாங்கள் ஒருவரையொருவர் வெல்ல முடியாது.

இரண்டு சமூகங்களும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே அடிப்படை விடயங்களை செய்யலாம்; என்பதை அன்றிலிருந்து இன்றுவரையில் கூறி வருகின்றேன். இதை  எத்தனை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொண்டார்களோ அல்லது  ஏற்றுக்கொள்ளவில்லையோ என்பது  எனக்குத் தெரியாது.

அரசியல் பேதங்களுக்கு அப்பால் இரண்டு சமூகங்களும் ஒன்றுபட்டால் மட்டுமே, எதையாவது சாதிக்க முடியும். இன்னும் தமிழ், முஸ்லிம் என்ற பேதங்களை பேசிக்கொண்டு, அரசியல் தலைவர்களின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் அகப்பட்டு அல்லற்படும் சமூகமாக இருப்போமானால், பொது பலசேனா போன்ற அமைப்புகள் எம்மை இலகுவாக அச்சுறுத்திவிட்டுச் செல்வார்கள்.

காலத்தின் கட்டாய தேவையாக அரசியல் தலைமைகளுக்கு அப்பால் நின்று வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒருமித்த கருத்துகளுடன் பேசும் நிலைமை ஏற்படவில்லை என்றால் எமக்கு விளைவுகளே ஏற்படும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X