2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கணிதபாட ஆசிரியரின் இடமாற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 19 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாலமுனை அஸ்ரப் வித்தியாலயத்திலிருந்து கணிதபாட ஆசிரியர் ஒருவர்  இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து அவ்வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவ்வித்தியாலயத்தின் நுழைவாயில் கதவை மூடி மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வித்தியாலயத்துக்கு கணிதபாட ஆசிரியர்கள் தேவைப்படும்  நிலையிலும், இங்கிருந்து கணிதபாட ஆசிரியர் ஒருவர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியரின் இடமாற்றத்தை இரத்துச் செய்து இவ்வித்தியாலயத்தில் அவரை மீளவும் நியமிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இவ்வித்தியாலயத்தில் சுமார்; 553 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு 26 ஆசிரியர்கள் தேவையான நிலையில்,  18 ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர். மேலும் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என மேற்படி வித்தியாலயத்தின்; அபிவிருத்திச் சங்கச் செயலாளர் எம்.ஐ.முபாறக் தெரிவித்தார்.

இது தொடர்பாக காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம்.பதுர்தீனிடம் கேட்டபோது, 'மேற்படி வித்தியாலயத்தில் கணிதபாட ஆசிரியர்கள் இரண்டு பேர் உள்ளனர். இவர்களில் ஒருவரை கணித பாடத்துக்கு ஆசிரியர்கள் எவரும் இல்லாத பாடசாலை ஒன்றுக்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக மாற்றியுள்ளோம். எனினும், இவர்களின் கோரிக்கை தொடர்பில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .