2021 மே 15, சனிக்கிழமை

காடுகள் அழிக்கப்படுவதை வனஇலாக பார்ப்பதாக குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 20 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட்ட எல்லைப் பிரதேசங்களில் பெரும்பான்மை இனத்தவரால் அரச காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதை வனஇலாக பார்த்துக்கொண்டிருப்பதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்ட பண்ணையார்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை செங்கலடி இலுப்படிச்சேனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது பால் உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வருடாந்தம் 80 ஆயிரம் லீற்றராக இருந்த பால் உற்பத்தி தற்போது ஒரு இலட்சம் லீற்றருக்கு மேல் அதிகரித்துள்ளது. மானிய அடிப்படையில் இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான மாடுகள் 65 ஆயிரம் ரூபாவிற்கு வழங்கப்படுகிறது. பண்ணையாளர்களை ஊக்குவிப்பதற்காக இன்னும் பல உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயனாளிகளை தெரிவு செய்வதில் நாங்கள் எந்தவகையிலும் தலையீடு செய்யவில்லை திணைக்களத்தின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மிகச் சிறந்த முறையில் தெரிவுசெய்திருக்கிறார்கள்.
 
மாவட்டத்தில் எல்லைப் பிரதேசத்தில் 5000 ஹெக்ரேயர் அரச வனப்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இதை வனஇலாக பார்த்துக்கொண்டிருந்து மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வருகின்றது என கூறுகிறார்கள். மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வருவதென்றால் அரசாங்க விதி முறைகளின் பிரகாரம் காணிகள் அந்த பிரதேசத்திலுள்ள மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என வரையறைகள் உள்ளன. இவர்கள் காட்டை அழிக்க முடியாது.
 
மட்டக்களப்பு மாவட்டத்திற்குத் தேவையான 25 சதவீத காடுகளை பேணித்தரவேண்டிய பொறுப்பு வனஇலாகவிற்குரியது. இவர்கள் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தைக் காரணம் காட்டி தப்பித்துக்கொள்ள முடியாது.  
 
எங்களுடைய வீட்டில் மரத்தை வெட்டுவதற்கு வன இலாகாவிடம் அனுமதி பெறவேண்டும் எனக் கூறுகிறார்கள்.  ஆனால், ஆயிரக்கணக்கான ஹெக்ரேயர் அரச காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பின்புலம் எனக் கூறுகிறார்கள். எங்களுக்குரிய அரசியல் பலத்தைக் கொண்டு இந்த விடயத்தை கையாளவிருக்கின்றோம்;' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .