2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பிணை வழங்க வேண்டாம் என கோரி ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா

காத்தான்குடியில் சிறுமியொருவர் வளர்ப்புத் தாயினால் சூடு வைத்து கொடுமைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களான வளர்ப்புத் தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்கும் பிணை வழங்க கூடாது என தெரிவித்து, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் உப தலைவரும் மார்க்கப் பிரசாரளாளருமான மௌலவி எம்.சி.எம்.சஹ்றாள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, '3 வருடமாக வீட்டுக்குள் நடந்த வன்கொடுமை தந்தைக்கு தெரியாதா?', 'இவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்க கூடாது', 'நீதி கொடு நீதி கொடு சிறுமிக்கு நீதி கொடு', 'சிறுமியை கொடுமைப்படுத்தாதே' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

காத்தான்குடி அப்தல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய்; சூடு வைத்துள்ள சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரது 2ஆவது மனைவியான மும்தாஜ் ஆகிய இருவரையும் காத்தான்குடி பொலிஸார் கடந்த 13ஆம் திகதி கைது செய்து,  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் திங்கட்கிழமை(14) ஆஜர்படுத்தினர்.

இதன்போது இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி கணேசராஜா உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X