2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

“மாகாண சபைக்கு வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரம் 18 வது திருத்தச்சட்டம் ஊடாக இழக்கப்படுகின்றது”

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மாகாணசபைக்கென இருந்த பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்கக்கூடாது என்ற உறுதியான முடிவில் இருக்கின்ற அரச உயர்பீடத்தின் முடிவை உறுதிப்படுத்தியதாக 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் அமைந்துள்ளதென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மாற்றம் பெற்றுள்ள உத்தேச அரசியல் திருத்த சட்டத்தை எடுத்துப் பார்த்தால், அதில் ஜனாதிபதி தேர்தல் முறைமையில் எவரும் எப்பவும் எத்தனை தரமும் போட்டியிடலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது உண்மையிலேயே தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாத விடயம். ஏன்னென்றால் எமது நாட்டிலே உள்ள ஜனாதிபதி, பிரதமர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் சிறுபான்மையை சேர்ந்த எவரும் வரமுடியாது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரிந்த விடயம். அது எமது நாட்டின் சாபக்கேடு கூட.

ஆனால், அரசியலமைப்பின் மாற்றமானது எங்களுக்குள்ள பாரிய பிரச்சினையாகும்.  ஏனென்றால் கடந்த 17 ஆவது அரசியல் அமைப்பு குழுவில் 10 பேர் அங்கத்துவம் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அது 18 ஆவது திருத்த சட்டத்தில் ஐந்து பேராக குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் எங்களுக்கு பிரச்சினையில்லை.

ஆனால் இதில் மாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமுடியாது என்ற கருத்துக் கொண்டுள்ள உயர்பீடத்தின் முடிவை  பிரச்சினையாக நாம் காணுகின்றோம்.

ஆகையால், தமிழர்கள் தனிநாடு கேட்டுப் போராடி, அதன் பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட மாகாணத்தை எடுக்கமுடியாமல் அவர்களுக்குள் அடிபட்டு இன்று அகதிகளாக ஆக்கப்பட்டு பரிதாப நிலையினை அடைந்திருக்கின்ற பொழுது மாகாணசபை முறைமையும் பலமிழக்கும் நிலைக்கு வந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை.

இதனை எந்த சிறுபான்மை சமூகமும் அறியாமல் இருக்கமுடியாது. ஆனால் பாவம் தமிழ் தேசிய கூட்டமைப்பு. கடந்த காலத்திலே நாங்கள் ஒன்றாக இருக்கின்றோம், ஒன்று சேர்வோம், கிழக்கையும் வடக்கையும் இணைப்போம் என முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கூச்சலிட்டார்கள் . அவர்கள்  தான் இன்று இந்த பேரவலத்துக்கு அரசியல் மாற்றத்துக்கு பெரும் உதவி செய்துள்ளார்கள் என்பது உண்மை. இது தமிழ் தேசிய கூட்டமைப்பு வெட்கப்படவேண்டிய விடயமாகும்.

அந்த அடிப்படையில் தேசிய அரசியல் பேசுவதில் நியாயமில்லை.   நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழினம் அழிந்து, இரத்தங்களை சிந்தி இன்று அரசியல் பலம் ஒன்றை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் உழைக்கின்ற  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிநிதியாக அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு தலைவராக ஆகியிருக்கின்றவன் என்ற அடிப்படையில் இதனை பேசமல் இருக்கமுடியாது என்பதன் காரணமாகத்தான் நான் இதனை பேசுகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .