2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

கரடியனாறை வர்த்தக நகரமாக மாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்.)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறை மாதிரி விவசாய விளைபொருள் வர்த்தக நகரமாக மாற்றுமாறும், வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கரடியனாறு பொலிஸ் நிலையத்தினை நவீன முறையில் அமைக்குமாறும் வேண்டுகோள் விடுத்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஜா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
 
அவரது கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கரடியனாறில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ் நிலையம் அமைந்திருந்த கட்டம் கமநலசேவை வளாகமாகும். அந்த வளாகத்தில் நெல் சுத்திகரிப்பு நிலையம், நெல் களஞ்சியசாலை, கமநல சேவை நிலையம் என்பன அமைந்திருந்தன. இவை அனைத்தும் சேதமாக்கப்பட்டுள்ளன.
 
இந்த இடத்தில் இருந்த பொலிஸ் நிலையம் தற்காலிகமான கொட்டகைகளில் இயங்கி வருகிறது. அத்துடன், கால்நடை வைத்திய காரியாலயம், அருகிலிருந்த ஆலயம், தபாலகம் மற்றும் வர்த்தகக் கட்டடங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன.
 
இவ்வாறு முழு அளவிலும் பகுதியளவிலும் அரச , தனியார் கட்டடங்கள் கரடியனாறில் சேதமடைந்துள்ளன.  
 
எனவே, விசேட புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி வேலைத் திட்டம் ஒன்றை கரடியனாறில் ஆரம்பித்து மாதிரி விவசாய விளைபொருள் வர்த்தக நகரமாக கரடியனாறை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் இந்த இடத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாமை வேறு இடத்துக்கு மாற்றி கரடியனாறு பொலிஸ் நிலையத்தினை புதிய முறையில் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
 
பதுளை வீதியில் கரடியனாறு நகரம் என்பது, ஏ - 5 வீதியின் மையப் பகுதியிலும், ஆயித்தியமலை உன்னிச்சை வீதி சந்திக்குமிடமாகவும், வேப்பவெட்டுவான் மாவடியோடை பகுதியை இணைக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.
 
இப்பகுதியிலுள்ள 90 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயம் மற்றும் மரக்கறிச்செய்கையிலேயே ஈடுபட்டு வருபவர்களாவர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கறிச் செய்கையில் கூடுதலாக செய்கை பண்ணப்படும் மகாவலி ஆற்றுப்பகுதியும் இதனை அண்டியே காணப்படுவதாலும் இலங்கையின் முக்கியமான மரக்கறி மாதிரிப் பண்ணைகளில் ஒன்றான கரடியனாறு இங்கு அமைந்துள்ளதாலும் இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 
இங்கு விவசாய விளைபொருள் வர்த்தக நிலையம் ஒன்றை அமைப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுமக்கள் பாரிய நன்மையடைவார்கள். எனவே கரடியனாறை விவசாய விளைபொருள் வர்த்தக நகரமாக ஆக்குவதன் மூலம் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மேம்பாட்டுக்கும் ஆவன செய்வீர்கள் என நம்புகிறோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X