2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தை காரணம் காட்டி கல்வியை இழக்க முடியாது

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)

வடக்கிலுள்ளவர்கள் யுத்தத்தின் பேரழிவுகளைச் சந்தித்தபடியே தமக்கான கல்வியையும் வளர்த்துக் கோண்டே இருந்தார்கள். இப்போது நாட்டுக்குள்ளேயும் உலகளவிலும் பலமான கல்விச் சக்தியாக மாறியிருக்கிறார்கள். ஆனால் கிழக்கைச் சேர்ந்தவர்கள் இதனைச் செய்யத் தவறிவிட்டனர் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்ரி.ஏ.நிசாம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் அதிபர் இந்திராணி புஷ்பராஜா தலைமையில் இன்று நடைபெற்ற நூற்றாண்டுக் கொண்டாட்டத்துடனான வித்தியாலய பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலாக மாணவர்கள் சித்தியடையாமல் இருக்கும் பாடசாலைகள் குறித்து அண்மையில் நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து முடிவுகள் எடுக்கப்பட்டு சுமார் 100 பாடசாலைகளுக்கு ஒரு மாதத்துக்குள் விஜயம் செய்வது என முடிவு செய்துள்ளளோம்.

அதன்படி இதுவரை 13 பாடசாலைகள் விஜயத்துக்கு ட்பட்டிருக்கின்றன. இப்பாடசாலைகளில் மாணவர்களின் வரவுக்குறைவு உள்ப்ளட்ட பல காரணங்களை நாங்கள் கண்டோம். அதற்கு பாடசாலையின் அதிபரிலிருந்து ஆசிரியர்கள் மற்றுமு; அதிகாரிகளாகய நாங்களும் பொறுப்பானவர்கள் என்றும் கண்டோம்.

ஆனால் அதிகமான பாடசாலைகளில் யுத்தத்தைக் காரணம் காட்டுகிறார்கள். இதனை நாம் எத்தனை காலத்துக்கு கரணம் காட்டமுடியும். வடக்கில் யுத்தத்தின் பேரழிவைச் சந்தித்தவர்களை மிகவும் மோசமான இன்னல்களை அனுபவித்தார்கள். ஆனால் அவர்கள் யுத்தத்தைக் காரணம் காட்டி கல்வியை இழக்கவில்லை.

அவர்கள் இழந்த பொருளாதாரத்துக்காக இன்னுமின்னும் உழைத்தார்கள். அவ்வாறு அவர்கள் கல்வியை இழந்திருந்தால் கிழக்கைவிடவும் கீழ் நிலைக்கே சென்றிருப்பார்கள்.

வடக்கிலிருந்து அவர்கள் துரத்தப்பட்டபோது உலகம் முழுவதிலும் வியாபித்தார்க்ள். கல்வியின் மூலமாகத்தான் அது அவர்களுக்குச் சாத்தியமானது. இப்போது நிலைமை சுமூகமானதும் நாட்டுக்குத் தனவந்தர்களாகவும் பலமுள்ளவர்களாகவும் வருகைதருகிறார்கள்.

ஆனால் கிழக்கிலிருந்து வெளியேறியவர்கள், இன்னமும் அகதி முகாம்களிலும் தமது கடந்தகாலங்களை மீண்டும் மீண்டும் புரட்டுபவர்களாகவும் முன்னேற்றமின்றி அவ்வாறே இருந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நிலை மாறவேண்டும்.

தமிழர்கள் அரசியல் அனாதைகளாக இருக்கிறார்கள், தமிழர்க்குரிய அரசியல் பாதுகாப்பு என்று கூறக்கூடியது, அரசியல் என்ற அதிகாரம் இல்லாவிட்டாலும், தமிழர்களின் கல்விமான்கள் ஒவ்வொரு இடத்திலும் இருந்தார்கள். அதனால் அரசியலின் தேவை இல்லாது இருந்தது. அதனால் அதன் பாதிப்புத் தெரியாமலிருந்தது.

இன்னும் 10 வருடங்களில் அது ஏற்பட்டுவிடும். அதற்காகவேனும் நம்முடைய பிள்ளைகளை நாம் கற்பித்தாக வேண்டும். நாம் கற்றவர்களாக துறைசார்ந்த கற்றவர்களாக நம்முடைய எதிர்கால சந்ததிகளை உருவாக்க வேண்டும் அப்போதுதான் தமிழர்கள் அரசியல் அனாதைகளாக இருந்து கொண்டிருக்காமல் செய்யமுடியும் என்றார்.

மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன்  தலைவர் சுவாமி அஜராத்மானந்தா ஜீயின் ஆசியுடன் ஆரம்பமான வித்தயாலய வருடாந்த பரிசளிப்பு விழாவில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.இ.போல் கௌரவ அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக வித்தியாலய பழைய மாணவிகளான வைத்திய கலாநிதி செல்வி அனுலா கனகலிங்கம், முதுல் மருத்துவ பீட மாணவி பிரமிளா தேவதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .