2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

தீயில் சுட்ட மீனையும் மழை நீரையும் உட்கொண்டோம்; ஒரு மாதம் கடலில் தத்தளித்த மீனவர்கள்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)

உணவின்றி, உறக்கமின்றி குடிப்பதற்கு நீரின்றி பல நாட்களாக கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது தான் திருகோணமலையிலிருந்து றோலர் படகில் வந்த மீனவர்களினால் வளைகுடா கடலில் வைத்து நாம் காப்பாற்றப்பட்டோம் என ஓகஸ்ட் 19ஆம் திகதி வாழைச்சேனைக் கடலில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று காணாமல் போய் நேற்று புதன்கிழமையன்று தனது வீடு வந்த சேர்ந்த கணபதி சிவராசா(55) தெரிவித்தார்

இச்சம்பவம் தொடர்பில் தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி நாங்கள் மூன்று மீனவர்கள் வாழைச்சேனைக் கடலில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றோம்.
மூன்று தினங்களில் மீன்களை பிடித்துக் கொண்டு வீடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக எமது படகின் இயந்திரம் பழுதடைந்து விட்டது. படகின் இயந்திரத்தை சரி செய்ய பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எமக்கு அது கைகூடவில்லை.

படகில் நாங்கள் கொண்டு சென்ற உணவு குடிநீர் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் காஸ் எரிவாயு மாத்திரம் எம்மிடம் எஞ்சியிருந்தது.

22.8.2010 தொடக்கம் 24.9.2010 வரை உணவு மற்றும் குடிநீருக்காக படாத பாடுபட்டோம். கடல் மீன்களை பிடித்து எங்களிடமிருந்த காஸ்  மூலம் சுட்டு சாப்பிட்டோம். மீனில்லாத சந்தர்ப்பத்தில் கடல் ஆமைகளை பிடித்து அதை சுட்டு உணவாக உட்கொண்டோம். மழை நீரை சேகரித்து குடிப்பதற்காக பயன்படுத்தினோம்.

இவ்வாறு எமது உயிருக்காக போராடிக்கொண்டிருந்த நிலையில் எமது படகு கடல் காற்றினால் அடித்துச்செல்லப்பட்டு திசை தெரியாமல் அடைந்து கொண்டிருந்தது.

24.9.2010 அன்று றோலர் படகொன்று வெகு தூரத்தில் வருவதை அவதானித்தோம்.
இந்நிலையில் கையிலிருந்த சாரத்திற்கு தீ மூட்டி அந்த றோலர் படகை நோக்கி சைகை செய்தோம்.
அன்றிரவு 7.30 மணியளவில் எங்களது பழுதடைந்த படகின் அருகில் அந்த றோலர் படகு வந்தது.
அதில் வந்தவர்கள் எங்களை கையிற்றைப் போட்டு அவர்களின் படகில் எற்றினார்கள். உடனே பிஸ்கட்டும் குடிநீரும் எங்களுக்கு தந்தார்கள்.
எங்களது இயந்திரம் பழுதடைந்த படகையும் அவர்களின் றோலர் படகில் கட்டி இழுத்துக் கொண்டு வரும் வழியில் எமது பழுதடைந்த படகு அறுந்து வீழ்ந்து கடலில் மூழ்கி விட்டது.

எங்களுக்கு ஏற்பட்ட நிலையை நாங்கள் அவர்களிடம் எடுத்துக் கூறினோம். அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் என்பதை அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

இது எந்த இடமென நாங்கள் அவர்களிடம் கேட்டோம். இது வங்காள விரிகுடா கடல் எல்லைப் பகுதியென எங்களிடம் அவர்கள் கூறினார்கள்.

25.9.2010 அன்று அவர்களின் உதவியுடன் வானொலியின் மூலம் திருமலை துறைமுகத்துடன் தொடர்பு கொண்டு எமது விபரங்களை அவர்கள் கூறினார்கள்.

26.9.2010 அன்று எமது உறவினர்கள் திருகோணமலை துறைமுகத்துக்கு வரவழைக்கப்பட்டு வானொலிக் கருவி மூலம் எமது குடும்ப உறவினர்களோடு உரையாடினோம்.

பின்னர் 6.10.2010 அன்று நாம் அவர்களின் உதவியுடன் திருமலை துறைமுகத்தை வந்தடைந்து அங்கு துறைமுக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியத்தின் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தோம்.
 
எமது வாழ்வில் அந்த நாட்கள் சோகமானதும் மறக்க முடியாததுமாகும். எமது கையிலிருந்த படகையும் இழந்து நிற்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

(படங்கள்: றிபாயா நூர், அனுருத்தன்)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .