2021 மார்ச் 06, சனிக்கிழமை

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியமை பாரதூரமான பிழை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எல்.தேவ்)

சட்டரீதியற்ற முறையில் தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அமைப்பான விடுதலைப்புகளுக்கு சட்டரீதியான அங்கிகாரத்தைக் கொடுக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியமை பாரதூரமான பிழையாகும். அந்த ஒப்பந்த முறிவுக்கும் அவர்களே பொறுப்பாகும் என்று வாழைச்சேனை சுயாதீன சமூக சேவை அமைப்பின் தலைவரான வை.எல்.மன்சுர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்துக்குமான ஜனாதிபதி ஆணைக்குழுவினர் இன்று ஓட்டமாவடிக்கு விஜயம் செய்தனர் அவர்கள் முன் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றைய தினம் காலை மக்களிடம் சாட்சியங்களைப் பதிவுசெய்வதற்காக இக்குழுவில் எச்.எம்.ஜீ.எஸ்,பலிஹக்கார, ரொஹான் பெரேரா, கரு ஹங்வத்த, எம்.பீ. பரணகம, மனோகரி இராமநாதக், சீ.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு சாட்சியமளித்த சாட்டோ விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.ரி.சாகீப், "மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் இருபத்தைந்து வீதமானவர்கள் முஸ்லிம்கள் இங்குள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச செயலகங்கள் நானகு மாத்திரமே உள்ளன.  முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்பட்டு அவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்ததுடன் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து சந்தோசமாக வாழவேண்டுமானால் இங்குள்ள காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும், இல்லையானால் இன்னும் ஒரு சில வருடங்களில் மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடுவதற்குக் காலாக அமையும். அதற்காக நீங்கள் உங்களது ஆணைக்குழு மூலம் எங்களுக்கு காணிப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்.

நாங்கள் இழந்த காணிகளை பார்வையிடுவதற்கும் அவை தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்குமாக கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று தெற்கு பகுதிகளுக்கு சென்று வரவேண்டியிருக்கிறது. ஆனால் எங்களால் முடியாமலிருக்கிறது. மட்டக்களப்பில் புலிப்பயங்கரவாதம் இல்லாமல் போயிருந்தாலும் இன்னமும் மட்டக்களப்பில் ஒரு அடக்குமுறை உள்ளது என்றார்.

இன்றைய தினம்    இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்ததுடன்  ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இரகசியமாக சாட்சியங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .