2021 மார்ச் 03, புதன்கிழமை

வடக்கு கிழக்கிலிருந்து ஒன்றரை இலட்சம் சிங்கள மக்கள் இடம்பெயர்ந்ததாகக் கூறுவது தவறு:பா.அரியநேந்திரன்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ், ரி.எல்.ஜவ்பர்கான்)

வடக்கு கிழக்கிலிருந்து ஒன்றரை இலட்சம் சிங்கள மக்கள் கடந்தகால யுத்தத்தினால் இடம்பெயர்ந்ததாக அண்மையில் பௌத்த துறவியொருவர் தெரிவித்திருப்பதானது அதிகமான சிங்கள மக்களை தமிழர் தாயகப் பிரதேசத்தில் குடியமர்த்துவதற்கான முயற்சியாக அமைகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு படுவான்கரையிலுள்ள முனைக்காடு நாகசக்தி இளைஞர் கழகத்தின் கலையரங்கம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கி அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இளைஞர் கழகத்தின் தலைவர் நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பட்டிப்பளை பிரதேச செயலாளர் வாசுகி அருளாராஜா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கணேசமூர்த்தி, கிராம சேவையாளர் அருள்ராஜசிங்கம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர் ஆலய வண்ணக்கர் சாந்தலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்,

வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்வதற்கு நாங்கள் எதிரானவர்களல்ல. ஆனால் குடியமர்வு என்ற பெயரில் அத்துமீறிய குடியமர்த்தல்களில் ஈடுபடுவதனையே நாங்கள் எதிர்க்கிறோம்.

வடக்கு கிழக்கிலிருந்து சுமார் பத்தாயிரம் வரையான சிங்கள மக்களே இடம்பெயர்ந்து சென்றிருப்பார்கள். ஆனால் பௌத்த துறவியார் பிழையான கணக்கொன்றை வெளியிடுகிறார்.

அப்படிப் பார்த்தால் யுத்தம் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. இப்பொழுதும் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் குடியமர்த்தப்படவில்லை. இரண்டு இலட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 89 ஆயிரம் விதவைகள், இருபத்தையாயிரம் அங்கவீனர்கள் என பெரும் பட்டியலே உள்ளது.

இவ்வாறான நிலையில் ஒரு பொறுப்புள்ள மதகுரு ஒருவர் தவறுதலான கணக்குகளை வெளியிடுதல் கூடாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் உடையதல்ல.

அண்மையில் ஜனாதிபதி இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் குடியமர்த்தப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர் இன அடிப்படையில் கருத்தெதையும் வெளியிட்டிருக்கவில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .