2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

அஞ்சல் துறையினை அபிவிருத்தி செய்வதே எனது குறிக்கோள்: அமைச்சர் ஜீவன்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லோஹித், சக்திவேல்)

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அஞ்சல் தொலைத் தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுடன் மாவட்ட அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் தேவை குறைபாடுகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.

கிழக்குமாகாண பிரதி அஞ்சல் அதிபரி என்.ரட்ணசிங்கம் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு பிரதம தபாலகத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தபாலகத்திற்கு புதிய கட்டிடத்தினை அமைத்தல், இரவு சேவைக்காக புதிய வாகனம் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளல், பிராந்திய அஞ்சல் மா அதிபர் கட்டிடம், அத்துடன் ஊழியர்கள், உத்தியோகத்தர்களின் பதவியுயர்வுகள் குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவற்றுக்கு விரைவில் தீர்வுகள் பெற்றுத்தரப்படும் என அமைச்சர் ஜீவன் குமாரதுங்க உறுதியளித்துள்ளார்.

அத்துடன் அஞ்சல் தொலைத் தொர்புகள் உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் எஸ்.ரதீஸ்வரனால் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள், தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம், மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து மகஜர் ஒன்றும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்க மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் தமது தேவைகள் குறித்தும் குறைபாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக இச்சங்கத்தின் செயலாளர் ரதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்றைய கலந்துரையாடலில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர், அமைச்;சின் இணைப்புச் செயலாளர்களான ருத்திரமலர் ஞானபாஸ்கரன், பொன் ரவீந்திரன், பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர் பி.புவனசுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பினை தொடர்ந்து மட்டக்களப்பு பெரியபோரைதீவில் தபால் காரியாலயம் ஒன்றும் திறந்துவைக்கப்பட்டது. தபாலகத்தை திறப்பு வைபவத்தில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பேசுகையில்...

'கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் நாடு முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்படும் நிதியில் 75 வீதமானவை வடக்கு, கிழக்கிற்கே வழங்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும் முயற்சியெடுத்து வருகின்றமை முக்கிய அம்சமாகும்...' என்று குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் ஜீவன் குமாரதுங்க பேசுகையில்... 'பாரிய பின்னடைவை சந்தித்த தபால் தொலைதொடர்புகள் இப்பொழுது விருத்தியடைந்து வருகிறது. நேற்றும் இன்றும் மட்டும் சுமார் 15 புதிய தபாலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. உலகின் முன்னணி நாடாக வளர்ந்துவரும் இலங்கையில் தபால் தொலை தொடர்புகளை மேற்படுத்துவதில் நான் பாடுபடுவேன்...' என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .