2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர்பற்று தளவாய் கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏறாவூர்பற்று தளவாய் கிராமத்தின் கிராம உத்தியோகத்தர் கே.ஜெகநாதன் இன்று ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளதோடு தஸ்தாவேஜுகள் சிலதும் கிழித்தெறியப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கிராம உத்தியோகத்தர் ஜெகநாதன், தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்...

'தளவாய் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருக்கின்ற மக்களுக்கு அரசாங்கம் சட்டபூர்வமாக காணிகள் சிலதை வழங்கியிருந்தது. இருந்தபோதிலும் அது அரச காணி என்று கூறி, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் இருந்துள்ளனர். இந்நிலையின் இன்று அந்த காணிகள் பற்றிய தஸ்தாவேஜுகளுடன் நான் சென்று தளவாய் பொலிஸ் அதிகாரிகளுக்கு விளங்கப்படுத்தினேன். அதனை பரிசீலித்த பொலிஸ் அதிகாரிகள் இவ்விடயம் சம்பந்தமாக திருப்தியான பதிலை வழங்கிய நிலையில் நான் மீண்டும் திரும்பிவந்தேன்.

இந்நிலையில் இன்று மாலை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மேலும் இருவரும் பொல்லுகளுடன் வந்து என்னை தாக்கியதுடன் ஆதாரமாக நான் வைத்திருந்த ஆவணங்களையும் கிழித்தெறிந்துவிட்டு சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் பிரதேச செயலாளருக்கும் முறையிட்டுள்ளதாக கிராம சேவகர் மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லரிடம் இச்சம்பவம் தொடர்பாக கேட்டபோது... 'எங்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எழுத்துமூல முறைப்பாடு கிடைக்கவில்லை. அப்படி ஒரு முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்..' என தெரிவித்தார்.

இதேவேளை, தளவாய் கிராம உத்தியோகத்தர்- சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .