2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் தீர்வு வரும் வரையில் அரசியல் பயனம் ஓயாது : அரியநேத்திரன்

Super User   / 2010 டிசெம்பர் 19 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோகித்)

எங்களது இலக்கினை வென்றெடுக்க கூடிய ஒரு அரசியல் தீர்வு எங்களிடம் வருகின்றதோ அந்த எல்லைவரும் வரையில் எங்களது அரசியல் பயனம் ஓயாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலத்தில் இடம்பெற்ற நூற்றாண்டு விழாவும் 'வெட்டாப்பு' சஞ்சிகை வெளியீடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலய அதிபர் வி.கனகசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கூட்டுறவு வர்த்தக விவகார பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவுத், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா,பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,

"இந்தப்பாடசாலை பல கல்விமான்களை இந்த நூறு ஆண்டுகளில் உருவாக்கியுள்ளது. அத்துடன் எமது விடுதலைப்போராட்டத்தில் 61 வருட போராட்டத்தில் 30 வருடங்கள் அகிம்சை வழியில ;போராடியுள்ளோம், 31வருடங்கள் ஆயுதப்போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும் அந்த 31 வருட போராட்ட காலத்திலே பல போராளிகளை இந்த மண் தந்துள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இன்று இங்கு வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவுத் கூட போரட்டத்தில் இருந்துதான் இன்று இந்த பிரதியமைச்சர் நிலைக்கு வந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். ஆகவே நாங்கள் வரலாறுகளை ஒருபோதும் மறந்துவிடமுடியாது என்பதையும் நான் இவ்விடத்தில் கூறிக்கொள்விரும்புகின்றேன்.


இன்று தமிழர்களை பரதேசிகள் என்றும் 10 நூற்றாண்டில் வந்த பரதேசிகள் என்றும் கூறுகின்றனர். எங்களது வரலாறுகள் என்பது கல்வியுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை இவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவேதான் நான் இங்கு கூறுகின்றேன் போராட்டங்கள் அழிக்கப்படலாம். போராட்டங்கள் மூலம் கிடைத்த தியாகங்கள் அழிக்கப்படமுடியாது என்பதைத்தான் இங்கு கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.

இன்று வடகிழக்கில் போதைவஸ்த்துகளை பாவிப்பவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. அப்படியானால் அதற்கு யார் காரணம். இதனை நாங்கள் சிந்திக்கவேண்டும்.  இதனை யார் தடுக்கவேண்டும் என்பதை நாங்கள் சிந்திக்கவேண்டும். இதனை தடுப்பதற்கு ஒரேயொரு இடம் கல்விக்கூடம் மட்டும்தான்.

இன்று நாங்கள் ஒற்றுமைப்படவேண்டிய காலமாக இருக்கின்றது.நாங்கள் ஜனநாயக வழியில் ஒற்றுமைப்படுவோமானால் அது எமது இழந்த உரிமையையும் பெறக்கூடிய இருக்கும்.

எல்லோரும் நினைக்கின்றார்கள் எல்லாம் முடிந்தவிட்டது என்று,அந்த மனோபாவத்தில் இருந்து நாங்கள் முதலில் மீளவேண்டும்.ஒன்றுமே முடியவில்லை,எல்லாம் முடிந்துவிட்டது என்று எங்களதுபோக்கைமாற்றிக்கொண்டிருந்தால் எமது சமூகம் சீரழிந்துவிடும், அனைத்தும் சீரழிந்துவிடும். இதனை தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

முதலில் நாங்கள் எங்களது மனோநிலையை மாற்றிக்கொள்ளவேண்டும்.எங்களுக்காக நாங்கள் எங்களது உரிமையினை,அபிவிருத்தினை வென்றெடுக்கக்கூடிய எங்களது இலக்கினை வென்றெடுக்க கூடிய ஒரு அரசியல் தீர்வு எங்களிடம் வருகின்றதோ அந்த எல்லைவரும் வரையில் எங்களது அரசியல் பயனம் ஓயாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

வடகிழக்கில் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு எந்தவகையான அரசியல் பலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றதோ அதேபோன்றுதான் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கு அரசியல் பலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது. என்றார்.


இந்த நிகழ்வில் 'வெட்டாப்பு'சஞ்சிகை வெளிட்டுவைக்கப்பட்டதுடன் சஞ்சிகை வெளியீட்டு உரையினை சஞ்சிகை ஆசிரியர் க.உபேந்திரன் நிகழ்த்தியதுடன் ஆய்வுரையினை ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப்பணிப்பாளர் சா.தில்லைநாதன் நிகழ்த்தினார்.

பாடசாலை தொடர்பான இணைத்தளத்தை பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆரம்பித்துவைத்ததுடன் ஆரையம்பதி பிரதேச செயலாளரும் பழைய மாணவர் சங்க உறுப்பினருமான கோ.தனபாலசுந்தரத்தினால் கருத்துரை வழங்கப்பட்டன.

அத்துடன் இந்த நிகழ்வில் பாடசாலையில் சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலையில் கடமையாற்றிய கடமையாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்,அதிபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

-----


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .