2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

இந்தியா 'சேவா' அமைப்பினூடாக விதவைகளுக்கு சுய தொழில் பயிற்சி

Super User   / 2011 ஜூன் 14 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்டவர்களுக்கு சுய தொழில் பயிற்சி வழங்குவதற்காக இந்தியாவிலுள்ள 'சேவா' எனப்படும் சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான அமைப்பின் பிரநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இலங்கை வரவுள்ள இந்த குழுவினர் முதற்கட்டமாக 40 விதவைகளுக்கு பயிற்சிகளை வழங்குவதுடன் பயிற்சி முடிவில் சுய தொழில்களை ஆரம்பிப்பதற்கான கருவிகளும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வழங்கப்படுவதை போன்ற பயிற்சியாளர்களுக்கான பயிற்சியை 'சேவா' நிறுவனம் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சுடன் இணைந்து, இவர்களுக்கு வழங்கவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

ஆடைத்தொழில், கணினி, கைப்பணி பொருட்கள், உணவு பதனிடலும் கால்நடை வளர்ப்பும் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி போன்ற எழு துறைகளில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக தெரிவுசெய்யப்பட்ட 50 பெண்கள்; இதுபோன்ற பயிற்சி பெற இந்தியா அனுப்பபடுவர் என அவர் குறிப்பிட்டார்.

இந்த இரு குழுவினரும் மட்டக்களப்பு மாவட்டத்திள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 800 விதவைகளுக்கு பயிற்சி அளிப்பார்கள் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கூறினார்.

முதற் கட்டமாக இரண்டு வருடத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்காக இந்திய அரசு 203 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த வருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

இதேவேளை, இந்த திட்டத்தில் முக்கிய பங்களிப்பு செலுத்தவுள்ள இந்தியாவின் சேவா நிறுவனத்திற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சிற்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த மே 31ஆம் கைச்சாத்திடப்பட்டது.
 
இதற்கு மேலதிகமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்டவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை வழங்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி ஆகியன இணக்கம் தெரிவித்துள்ளதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .