Lenin Raj / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெற்று வரும் யுத்தத்தைத் தற்காலிகமாக நிறைவுக்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரு சமாதானத் திட்டம் குறித்து, குறித்த நாடுகளுக்கிடையில் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு "தற்காலிகப் போர் நிறுத்தத்திற்காக" ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது என்று ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கின்றார். அமெரிக்கா நிரந்தரப் போர் நிறுத்தம் ஒன்றிற்குத் தயாரான நிலைப்பாட்டில் இல்லை எனவும் ஈரான் கருதுகின்றது.
பாகிஸ்தான் வழங்கிய போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும், காலக்கெடு விதிப்பதையோ அல்லது அழுத்தங்களுக்குப் பணிந்து முடிவெடுப்பதையோ ஏற்க முடியாது என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானை ஒரே தகவல் தொடர்பு ஊடகமாகக் கொண்டு, மின்னணு முறையில் இறுதி செய்யப்படவுள்ள இந்தத் திட்டம் 'இஸ்லாமாபாத் உடன்படிக்கை' என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோருடன் சுமார் 10 மணித்தியாலங்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கமைவாக, உடனடியாகப் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் எனவும், ஹார்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் எனவும், அடுத்த 15 முதல் 20 நாட்களில் ஒரு விரிவான தீர்வு எட்டப்படும் எனவும் சர்வதேசம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடாது என்ற உறுதிமொழிக்கு மாற்றாக, அதன் மீதான தடைகளை நீக்குவது மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் கூறுகையில், "எங்கள் தேசிய நலன்களின் அடிப்படையில் எங்களது கோரிக்கைகளை நாங்கள் வகுத்துள்ளோம். அமெரிக்காவின் 15 அம்சத் திட்டம் போன்ற மிகையான கோரிக்கைகளை நாங்கள் நிராகரித்துவிட்டோம். அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது," எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புஷெர் (Bushehr) அணுமின் நிலையம் மீது ஏப்ரல் 4 அன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (IAEA) தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இது கதிரியக்கக் கசிவை ஏற்படுத்திச் சுற்றுப்புற நாடுகளுக்குப் பேராபத்தை விளைவிக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.
குவைத்தின் புபியான் (Bubiyan) தீவில் உள்ள அமெரிக்கப் படைகளை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலின் சிதறல்கள் குவைத்தின் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுப் பிரிவுத் தலைவர் திங்கள்கிழமை 06 அன்று அமெரிக்க-இஸ்ரேல் படைகளால் நடத்தப்பட்ட "பயங்கரவாதத் தாக்குதலில்" கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போரை விரைவில் முடிக்க அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில், போலி மேடையில் அல்லது அரசியல் மேடையில் வைத்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பேரம் பேசக் கூடாது எனவும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
22 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
47 minute ago