2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இளைஞர், யுவதிகளுக்கு சுற்றுலாத்துறையில் தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கத் திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தியை  மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு அத்துறையில் தொழில்வாய்ப்பை வழங்க  பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் சுற்றுலாத்துறை  மேம்பாட்டு பணியகமும் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் றூமி ஜஹ்பர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாசிக்குடா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த 3 தசாப்தங்களாக கிழக்கு மாகாணத்தில் நிலவிய பயங்கரவாத சூழ்நிலை காரணமாக இப்பிரதேசத்திலுள்ள இளைஞர்களும் யுவதிகளும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதுடன், தொழில்களை பெற்றுக்கொள்வதில் பாரிய கஷ்டங்களை அனுபவித்து  பலர் சந்தர்ப்பங்களையும் இழந்துள்ளனர். இதனால் மனவழுத்தங்களுக்கும் மனவுழைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். இதனை சீர்செய்யும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பாசிக்குடா பிரதேசத்தில் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளை கவரும் பலவகையான திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பில்  தற்போது முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

பாசிக்குடா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 10 உல்லாச ஹோட்டல்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படவுள்ள அதேவேளை,  2012ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் பாசிக்குடா உல்லாசப் பிரயாண வலயத்தினுள் மேலும் 4 உல்லாச ஹோட்டல்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளன.

பாசிக்குடா உல்லாச பிரயாண வலயத்திற்கென 156 ஏக்கர் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும்,  100 ஏக்கரில் 14 உல்லாச ஹோட்டல்களும் எஞ்சிய 56 ஏக்கரில்  வாகன தரிப்பிடம், மலசலகூடம்,  வர்த்தக நிலையங்கள்,  ஹெலிகொப்படர் இறங்குதுறை மற்றும் குளிரூட்டும் நிலையங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளன. சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தி நடைபெறும் வேளையில் இப்பிரதேசங்களிலுள்ள உல்லாச ஹோட்டல்களில் தொழில் புரிவதற்காக பாசிக்குடா மற்றும் அதன் அயல் பிரதேசங்களிலுள்ள பல இளைஞர், யுவதிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .