2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

தொலைபேசி விற்பனை நிலையத்தில்; கொள்ளையிட்டவர்களுக்கு கடூழிய சிறைத் தண்டனை

Super User   / 2011 நவம்பர் 19 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு வெயிலி வீதியில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை மற்றும் திருத்தம் செய்யும் கடையினை கடந்த 2011.02.01 ஆம் திகதி இரவு உடைத்து கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நான்கு பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.அப்துல்லா நேற்று  கடூழிய சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேற்படி கடையை உடைத்து ஒரு இலட்சத்தி 126,050 ரூபா பெறுமதியான புதிய கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் திருத்த வந்த பழைய கையடக்கத் தொலையேசிகள், வெற்றி, மற்றும் உதிரிப் பாகங்கள் என்பன  கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு , கல்லடி, புதிய கல்முனை வீதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை உமாசுதன் மட்டக்களப்பு பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாடு செய்திருந்தார்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி த.சாந்தகுமார் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையினைத் தொடர்ந்து நான்கு பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டதுடன் கடையுடைத்து கொள்ளையிட்ட பொருட்களும் மீட்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு, கொக்குவில் 2ஆம் குறுக்கைச் சேர்ந்த சிவகுமார் தர்ஷன், தம்பிராசா ரசிகுமார், ஞானசேகரம் ராஜகுலம், ரெட்ணம் திஜாகராசா அகியோரே  சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதிபதி என்.அப்துல்லா முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் முதலாவது சந்தேகநபரான சிவகுமார் தர்ஷனுக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையும் மூவாயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்துள்ளதுடன் தண்டப்பணத்தினைக் கட்டத்தவறினால் மேலும் ஒரு மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும்  தீர்ப்பு வழங்கியுள்ளார்.

ஏனைய சந்தேகநபர்களான தம்பிராசா ரசிகுமார், ஞானசேகரம் ராஜகுலம், ரட்ணம் தியாகராசா ஆகியோருக்கு   ஏழு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத கடூழிய சிறைத் தண்டனையும் மூவாயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்துள்ளதுடன் தண்டப்பணம் கட்டத் தவறுமிடத்து மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்

இவ் வழக்கை பொலிஸ் சார்பாக பொலிஸ் சார்ஜன் சிவப்பிரகாசம் சபேஷன் நெறிப்படுத்தினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .