2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

வட, கிழக்கில் அனைத்தையும் ஆட்சி செய்வதற்கான உரிமை தமிழர்களுக்கே: பிரசன்னா

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வட, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக நிலம் என்ற வகையில் மாகாண சபை உள்ளிட்ட அனைத்தையும் ஆட்சி செய்வதற்குறிய உரிமை தமிழர்களுக்கே உண்டு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என  ஆளும் கட்சியின் தமிழ் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ள கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"இன்று கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என ஆளும் கட்சியின் தமிழ் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளது மிகவும் வேதனைப்பட வேண்டிய விடயமாகவுள்ளது.

குறிப்பாக இன்று முஸ்லிம் சமூகம் தங்களது அரசியல் வேறுபாடுகளை கடந்து தங்களது இனத்துக்காகவும் மதத்திற்காகவும் செயலாற்றிக் கொண்டிருக்கும் போது தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை இன்னுமொரு சமூகம்தான் ஆட்சிசெய்யும் என்று கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

உண்மையில் வட கிழக்கில் உள்ள அனைத்து இடங்களும் தமிழர்களின் வரலாற்று பூர்வீக நிலங்கள் அதனை காப்பாற்றிக் கொள்வதற்காகவே இன்று வரை தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத வழியிலும் அகிம்சை வழியிலும் போராடிய தமிழினம் இன்று இராஜதந்திர ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

உலகம் தமிழர்களின் போராட்டத்தை அங்கீகரித்துள்ளது. உலக நாடுகள் தமிழர்களின் பூர்வீக தாயக நிலம் வட கிழக்கு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் தங்களது நிலங்களை பாதுகாப்பதற்காக பல இலட்சம் உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளார்கள்.

பல போராளிகள் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள் இவ்வாறு நாங்கள் போராடி காப்பாற்றிய நிலத்தை வேறு யாரும் ஆட்சி செய்ய தமிழர்கள் ஒருபோதும் விடமாட்டார்கள். வட கிழக்கை தமிழர்களிடமிருந்து பிரிப்பதற்கு அரசாங்கம் காலம் காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையிலேயே இந்த மாகாண சபைகளையும் ஏனைய சபைகளையும் அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் வட கிழக்கு இணைந்த தாயக சுயாட்சியையே காலம் காலமாக கோரி வருகின்றது. அதனை அடைவதற்கான இராஜதந்திர போராட்டமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த மாகாண சபை பயணம்.

இது முடிவல்ல. தமிழர்கள் சுயாட்சி பெறுவதற்கான முதல்படி எனவே கிழக்கு மாகாண சபையையோ அல்லது ஏனைய விடயங்களையோ வைத்துக்கொண்டு தமிழர்களின் ஆட்சியை தீர்மானிப்பது கேலிக்கூத்தான விடயம். வட கிழக்கை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தமிழர்கள் உட்பட உலகமே ஏற்கனவே தீர்மானித்து விட்டது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .