2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

வறட்சியால் நீர் நிலைகள் வற்றுகின்றன

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,ஏ.எம்.பரீத்


கிழக்கில் தொடர்ந்து கடுமையான வறட்சி நிலவுவதால் அங்குள்ள நீர் நிலைகள் வற்றிக்கொண்டு போவதுடன்,  கிணறுகளிலும் நிலத்தடி நீர் முற்றாக வற்றிப் போகின்ற நிலைமை காணப்படுகின்றது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்றாவது பெரிய குளமான உறுகாமம் குளத்தின் நீர் முற்றாக வற்றிப்போயுள்ளது. 

உறுகாமம் குளத்தின் வருடாந்த நீர்க் கொள்ளவு 18,600 ஏக்கர் அடியாகும்.  ஒரு நெற்செய்கைப் போகத்தில் 7,200 ஏக்கர் நெற்செய்கைக்கான நீர்ப்பாசனம் இந்தக் குளத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்ததாக என நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே பெய்யத் துவங்கியிருக்க வேண்டிய பருவ மழை நீண்ட நாட்களாக பொய்த்துப் போயிருப்பதே இவ்வாறான கடும் வறட்சிக்குக் காரணமாகும்.

நீர் நிலைகள் வற்றிக்கொண்டு போகின்ற நிலையில், குளத்தை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், குடிநீர்த் தட்டுப்பாட்டையும்  மக்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இது இவ்வாறிருக்க, வழமையாக  ஒக்டோபர் மாதத்தில் பெய்யத் துவங்கும் பருவ மழை இம்முறை பொய்த்துப் போயுள்ளதாக விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

மேலும், பெரும்போக வேளாண்மை செய்கைக்கான நெல் விதைப்பு வேலைகள்  இம்மாதம் 10ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகின்றது.  ஆயினும், மழை இல்லாத காரணத்தினால் 80 சதவீதமான வயல் நிலங்களில் உழவு வேலைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாதுள்ளது.  மழை பெய்தால்தான் உழவு வேலைகளை மேற்கொண்டு பின்னர் நெல் விதைப்புக்கு நிலத்தைத் தயார்படுத்த முடியம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும்  வறட்சி காரணமாக பால் உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பால்  பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வறட்சியால் புல், பூண்டுகள் கருகியுள்ளதுடன், நீர்நிலைகளில் நீரும் வற்றிக்கொண்டு போவதால்; உணவும் நீருமின்றி கால்நடைகள் சிரமப்படுகின்றன.

கால்நடைகள் உணவும் தண்ணீரும் இன்றி  அங்கும் மிங்கும் அலைந்து திரிவதுடன்,  எலும்பும் தோலுமாகியுள்ளன. இதனால் கால்நடைகள் செத்து மடியும் நிலைமை காணப்படுவதாக  பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கால்நடை வளர்ப்போர்  பொருளாதார ரீதியாகவும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.

கடந்த காலத்தில் தினசரி 4,000 தொடக்கம் 5,000 லீற்றர் வரை பால் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறும் இலுப்படிச்சேனையில் உள்ள பால் கொள்வனவு நிலையத்தில் பணியாற்றும் பி.சுசிலன், தற்போது  பால் கொள்வனவில்  300 தொடக்கம்  500 லீற்றர்வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது  எனவும் கூறினார்.

காடுகளில் உள்ள குளங்களும் தற்போது நீர் வற்றிக் காணப்படுவதால் காட்டு யானைகள் நீர் தேடி மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பதுளை வீதி நெடுஞ்சாலையிலுள்ள கிராம மக்கள்  அச்சத்திலும் பீதியிலும் உறைந்துபோய் உள்ளார்கள்.

ஏற்கெனவே வறட்சியினால் ஏற்பட்டுள்ள தண்ணீர்  பிரச்சினையுடன் மற்றுமோர் பிரச்சினையாக காட்டு யானைகளின் தொல்லைகளையும் தாங்கள் சந்திப்பதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--