2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

காசநோய விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


சுகாதார அமைச்சின் காச நோய்க் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்ச் சிகிச்சைப் பிரிவின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திங்கட்கிழமை(24) காச நோய் மற்றும் மார்பு நோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

மார்ச் 24 உலக காசநோய்த் தடுப்பு தினத்தையொட்டி  இந்த விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மார்பு நோய்ச் சிகிச்சை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  காச நோய் மற்றும் மார்பு நோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலிருந்து செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவு வரை கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாகச் சென்றது.

வேர்ள்ட் விஷன் நிறுவனம் இதற்கு அனுசரணை வழங்கியிருந்தது.

இலங்கையில் சுமார் நான்காயிரம் (4000) காச நோயாளர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதாக விழிப்புணர்வு ஊர்வல பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

'காச நோயை என் வாழ்நாளில் இல்லாதொழிப்பேன்' 'காச நோய் முற்றாக குணமாக்கக் கூடியது' 'காச நோய் பரம்பரை நோய் அல்ல அது ஒரு தொற்று நோய்'  போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளும் வேர்ள்ட் விஷன் நிறுவனத் தொண்டர்களும் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கல்லாறு போன்ற ஆதார வைத்தியசாலைகளிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் சளிப்பரிசோதனை செய்து காச நோய் உள்ளதா என்பதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என மட்டக்களப்பு காசநோய் மற்றும் மார்பு நோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு மேற்பட்ட இருமல் காச நோயின் பிரதான அறிகுறியாகும். அத்துடன் இரவு நேரத்தில் மெல்லிய காய்ச்சல், பசியின்மை, உடல் நிறை குறைதல், களைப்பு, சோர்வு இருமும் போது சளியோடு இரத்தம் வெளிவருதல் போன்றவை காசநோயின் ஏனைய அறிகுறிகளாகும்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .