2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கிழக்கில் முதலீடு செய்ய பங்களாதேஷ் முடிவு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


கிழக்கு மாகாண மீன்பிடி மற்றும் விவசாயத்துறைகளில் முதலீடு செய்ய பங்களாதேஷ் முன்வந்துள்ளது என்று பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் முஹமட் சுபியான் ரஹ்மான் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

திருகோணமலை வரோதய நகரில் உள்ள அமைச்சரின் பிரத்தியேக அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான அந்நியோன்ய உறவை சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்த காலங்களில் இவ்விரு நாடுகளுக்கிடையிலான சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் தொடர்புகளையும் விளக்கினார்.

கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித் துறையில் முதலீடு செய்வதற்கான வளங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். நவீன முறையில் இவ்விரண்டு துறைகளிலும் ஊக்குவிப்புக்களை மேற்கொள்வதன் மூலம் முதலீட்டாளர்கள் அதிக இலாபம் பெறமுடியும் என்பதையும் மாகாண அமைச்சர் விளக்கினார்.

இதன்மூலம் இலங்கை – பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு ஏற்படும் பலாபலன்களை ஏற்றுக்கொண்ட பங்களாதேஸ் உயர்ஸ்தரிகர், அடுத்த மாதம் பங்களாதேஷ் தொழில்நுட்பக் குழுவொன்று கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய உயர்ஸ்தானிகர், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டம் குறித்து தான் பெரிதும் திருப்தி அடைவதாகவும் அதன் முன்னேற்றங்கள் தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரின் ஆலோசகர் எப்.எம்.பூகான் உதீன், அமைச்சின் செயலாளர் க.பத்மநாதன், பிரதி செயலாளர் நவ்பீஸ், அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் ஞானசேகரன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .