2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

இனி வரப்போகும் தேர்தலும் மக்களின் பிரச்சினைகனை தீர்த்து வைக்காது: பஷீர்

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


இனி வரப்போகின்ற எந்தத் தேர்தலும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிறுபான்மைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போவதில்லை என்று உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

அமைச்சர் பஷீரின் பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் அம்பாள் மணிமண்டபப்பணி தொடக்க விழாவுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கணேச காளிகா ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும் ஏறாவூர் நகரசபை உறுப்பினருமான பி. கஜேந்திரகுமார் தலைமையில், ஏறாவூர் 4ஆம் குறிச்சி பலநோக்குக் கட்டடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பேரம் பேசும் பெரும் சக்தியாக சிறுபான்மை மக்கள் உருவெடுக்க வேண்டும். தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். இதுதான் இனி எஞ்சியிருக்கும் ஒரேவழி.

வெறுமனே உள்ளூராட்சி சபைகளுக்கும் மாகாண சபைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் வெறும் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதை விட, பேரம் பேசுகின்ற ஒரு அரசியல் களத்துக்கு உயிரோட்டமுள்ள உறுப்பினர்களைத் தெரிவு செய்வதுதான் உசிதமான வழி என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

தேர்தல்களில் நம்பிக்கை வைக்க முடியாது. இனி வரும் காலங்களில் சிறுபான்மை மக்;களின் கைகளில் இருக்கப்போகின்ற வாக்குச்சீட்டுக்கள், பெரும்பான்மை ஆட்சியாளர்களோடு பேரம் பேசுவதற்கான அரசியல் அதிகாரத்தை வழங்குவதற்கான ஒரு பலம்மிக்க கருவியாகப் பாவிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

சிறுபான்மை மக்களின் கைகளில் இருந்த வாக்குச்சீட்டுக்கள், ஒரு சிலரை எம்.பிக்களாக, பிரதேச, நகர, மாகாண சபை உறுப்பினர்களாக மாற்றுவதற்கு பயன்பட்டிருக்கின்றது. அவ்வளவுதான். இதைவிட எமது வாக்குச் சீட்டுக்கள் வேறொன்றையும் சாதித்ததில்லை.

சிறுபான்மையினரான தமிழர்களிடம் 16 இலட்சமும் முஸ்லிம்களிடம் 14 இலட்சமும் மலையகத் தமிழர்களிடம் 9 இலட்சமும் சிங்களம் பேசும் கிறிஸ்தவ மக்களிடம் 4 இலட்சம் என்ற அடிப்படையில் வாக்குகள் உள்ளன.

இந்த வாக்குகளை ஒட்டுமொத்தமாகத் திரட்டி ஒரு பேரம் பேசும் அரசியல் அதிகார சக்தியாக அணி திரண்டு ஆட்சியாளர்களிடம் பேசவேண்டும். இது ஏன் முடியாது ?

காலங்காலமாக நாம் எம்.பிக்களைத் தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால், கடந்த காலத்தில் நாம் மேற்கொண்ட தெரிவுகள், சரியானதாக அமைந்திருந்தால் ஏன் சண்டை வந்திருக்க வேண்டும்?

இனி நாம் ஒற்றுமையாகப் போவதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும். நம்மைப் பிளவுபடுத்தியது ஆளும் வர்க்கம்தான். நான் எனது 19 வயதிலிருந்தே ஆயுதமேந்தி தமிழர் உரிமைப் போராட்டத்திலே பங்குபற்றியவன்.

1987ஆம் ஆண்டு இந்தியப் படையினரால் நான் கைது செய்யப்பட்டேன். 4ஆம் மாடிக்கு விசாரணைக்காக நான் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றேன்;. மலையகத்திலும் எமது ஈரோஸ் இயக்கம் சிறுபான்மை உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்து ஊவா மாகாணத்தின் பிபிலை மற்றும் பதுளைப் பொலிஸ் நிலையங்களிலும் நான் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டிருக்கின்றேன்.

இப்படி எனக்கு ஆயுதப் போராட்டத்திலும் அரசியல் வாழ்க்கையிலும் நீண்ட நெடிய அனுபவம் உண்டு. நாங்கள் தமிழீழம் வென்று உரிமை பெற்றுத் தருகின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் சொன்னார்கள்.

எனவே, குழப்பமில்லாமல் அவர்களிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு ஈரோஸ் இயக்கம் ஒதுங்கி விட்டது. பொது எதிரிக்கெராகவே நாங்கள் போராடினோம். நாங்கள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை.

அந்தத் துணிவோடுதான் நான் இன்று வரை உரத்துக் குரல் கொடுக்கின்றேன். சிங்களவர்கள் மட்டுமே வெல்லப் போகின்ற இந்த ஜனாதிபதித் தேர்தலிலே, தனித்தனியே யாருக்கும் பேரம் பேசும் சக்தி கிடையாது. அது தமிழர்களுக்கும் இல்லை, முஸ்லிம்களுக்கும் இல்லை.
சுய நிர்ணய உரிமை தருகின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவோ, பொது வேட்பாளராக சந்திரிக்கா அம்மையாவோ முன்வந்து உத்தரவாதமளிக்க மாட்டார்கள்.

ஏனென்றால், சிறுபான்மை இனத்தின் ஒரு வாக்குக்காக பெரும்பான்மை சிங்களவர்களின் 4 வாக்குகளை இழக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
புலிகள் ஆயுதங்களுடன் சமபலத்திலே இருக்கின்ற வேளையில், தனது ஆட்சிக் காலத்திலே உள்ளக சுய நிர்ணய உரிமை தருகின்றேன் என்று நோர்வேயில் ஒத்துக் கொண்ட ரணில் விக்கிரமசிங்ஹ, இப்பொழுது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 13ஆவது திருத்தச் சட்ட மூலத்தைத்தான் அமுல்படுத்துவோம். அதற்கு மேல் செல்லமாட்டோம் என்று கூறுகின்றார்.

மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தில் வென்றது ரணில் விக்கிரமசிங்ஹவுக்கு நன்மையாகப் போய்விட்டது. வன்முறை என்ற அரசியல் வழிமுறையைத் தவிர்;த்து, மற்றெல்லாவற்றுக்கும் குரல் கொடுப்பதற்காக இந்த நாட்டில் இருக்கின்ற சிறுபான்மையினர் நிபந்தனையற்று ஒன்றிணைய வேண்டும்.
நான் தமிழ் முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பேசாமல் மனிதனாக நின்று கொண்டு பேசுகின்றேன்.

அதனால்தான் அம்பாள் மணி மண்டபத்துக்கு அடிக்கல் நாட்ட வந்திருக்கின்றேன். எல்லாவற்றையும் இழந்து பரிதவிக்கின்ற நமக்கு இன்னமும் எஞ்சியிருக்கின்ற ஒன்று மனிதன் என்கின்ற ஒரேயொரு அடையாளம்தான். இதனை நாம் நமது ஈனச் செயல்களால் இழந்து விடாது பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் அடுத்த பரம்பரையாக ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும். வன்முறைக்குக் கொண்டு சேர்க்காத அரசியல் நமக்கு வேண்டும்.

தமிழ் முஸ்லிம் என்று நான் ஒருபோதும் பிரித்துப் பார்த்ததில்லை. இனியும் அவ்வாறுதான் என் பணி தொடரும். புரிந்து கொண்டவர்கள் என்னோடு இணைந்து பணியாற்ற முன்வாருங்கள். அப்பொழுதுதான் ஒரு சிறந்த மனித சமூகத்தை நாம் உருவாக்கலாம்.
தேர்தல்களால் நமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும். தேர்தல்களில் வென்று கிடைத்த எம்.பி பதவிகளையே ராஜினாமா செய்து, விட்டுப்போன தமிழ் அரசியல் வரலாறு தமிழர்களிடத்தில் இருக்கின்றது.

தேர்தல்களில் தோல்வியடைந்து தேர்தல்களால் எல்லாம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது என்று எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் போராட்டம் தொடங்கியது.

ஆகவே, இனி இதுபற்றி சிறுபான்மையினராகிய நாம் காத்திரமாகச் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .