2025 ஜூலை 02, புதன்கிழமை

கிழக்கு மாகாண சபை தளம்பல் நிலையில் உள்ளது

Kogilavani   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நடந்து முடிந்த தேர்தலுக்கு பிற்பாடு கிழக்கு மாகாண சபையானது தளம்பல் நிலையில் உள்ளதாகவும் முதலமைச்சர் பதவியை தாமே மீண்டும் கையில் எடுக்கவேண்டும் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நினைப்பதன்மூலம் சிறுபான்மை கட்சிகளிடையே எதிர்காலத்தில் இன விரிசல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.


இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,


இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆளும் அரசாங்கத்தை ஆதரித்து அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீ லங்கா முஸ்லிங் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிங் காங்கிரஸ், பொதுஜன ஐக்கிய முன்னனி ஆகியன சேர்ந்து கிழக்கு மாகாணசபை ஆட்சியை நடத்தி வந்தார்கள்.


ஜனாதிபதி தேர்தலின் பின்பு, முன்னைய அரசு பலமிழந்ததன் காரணமாக கிழக்கு மாகாண சபையை இயக்கமுடியாத ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. ஆனால் தற்போது கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை கொண்டு நடத்தக்கூடிய ஒரு அமைப்பாக எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு  11 உறுப்பினர்களைக்கொண்டு இயங்கி வருகின்றது.


ஆரம்பகாலத்தில் இருந்தே கிழக்கு மாகாண சபையை தமிழ்ப்பேசும் சமூகம் ஆட்சி  செய்ய வேண்டும் என்று எமது த.தே.கூட்டமைப்பின் தலமைகள் முடிவெடுத்திருந்தார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் தலமைகள் கிழக்கு மாகாணசபையில் தமிழர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க தடையாக இருந்து வருகின்றார்கள்.


தற்போது கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரங்களை செய்யவேண்டும் என்பதற்காக எமது கட்சி தலைமைகள் முஸ்லிம் காங்ரஸ் அரசியல் தலமைகளுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது.


ஆனால் இன்று இவர்களுடன் எமது கட்சி நடத்திய பேச்சு வார்த்தை ஆரோக்கியமற்றதாக காணப்படுகின்றது. குறிப்பாக முஸ்லிம் காங்கரஸ் உறுப்பினர்கள் தமக்கு முதலமைச்சர் பதவியை எடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றார்கள்.


த.தே.கூட்டமைப்பை பொறுத்தவரையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சியின் வேண்டுதலின் பேரில் எமது தமிழ் மக்களின் வாக்கு கனிசமான அளவுக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு  வழங்கப்பட்டிருந்தது.


அவ்வாறு வழங்கப்பட்டிருந்தும் அவர்களது அரசாங்கத்தில் எந்த அமைச்சுப்பதவிகளையோ எமது கட்சி பெற நினைத்தது கிடையாது. ஆனால்  தற்போதுள்ள ஆளும் அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பல அமைச்சுப் பதவிகளை எடுத்திருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் எங்களுடைய அதிகாரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் முதலமைச்சுப் பதவியை கேட்டு நிற்கின்றோம்.


முன்பிருந்த சபையினால் எமது இனம் வெகுவாக ஓரங்கட்டப்பட்டிருந்தது. பொதுவாக அனைத்து விடயங்களிலும் என்று கூறலாம். அவ்வாறு பாகுபாடு காட்டப்பட்டிருந்து நாங்கள் அவ்வாறு இல்லாமல் இரண்டு சமூகங்களும் ஒற்றுமையுடன் கிழக்கு மாகாணசபையை அமைக்க முன்வருவோமானல் எதிர்காலம் எமக்கு நல்லதாக அமையும்.


ஆனால், அண்மைய தகவல்களின்படி முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்களுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தை கொண்டு செல்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்து இருப்பதாக அறிகின்றோம்.


அவ்வாறு இருக்குமானால் எதிர்காலத்தில் இந்த இரண்டு சமூகங்களுக்கிடையேயும் பாரியளவிலான இடைவெளி காணப்படுவதுடன் உறவுகளும் சீர்குலையும் நிலையும் உருவாகலாம். எனவே இதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் கவனத்தில் எடுத்து செயற்படுவது காலத்தின் கட்டாய கடமையாகும்' என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .