2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இரவு 7 மணிக்குப் பின் பிரத்தியேக வகுப்புகளை நடத்தாதிருக்க தீர்மானம்

Kogilavani   / 2011 ஜூன் 11 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.வதனகுமார், ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பாக பெற்றோர்களாலும் கல்விமான்களாலும்  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்கொண்டு வரப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்று கிழக்குமாகாண முதலமைச்சர் வாசஸ்தலத்தில் ஆராயப்பட்டது.

பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கான நேரம் மற்றும் கட்டணங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சத்தியநாதன் குணலிங்கம், மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், மாநகர ஆணையாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாவதி பத்மராஜா, மண்முனை வடக்கு பிரத்தியேகச் சாலை உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக் கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

1.   ஞாயிறு விடுமுறை தினங்களில் மார்க்கக் கல்விகளை மாணவர்கள் பயில்வதற்காக பி.ப 2.00 மணிவரை கல்விப் பொதுத் தராதர சாதாரண மாணவர்கள் உட்பட அதற்கு கீழ்ப்பட்ட வகுப்புக்கள் நடத்துவதில்லை.

2.   போயா விடுமுறை தினத்தில் எந்தவித பிரத்தியேக வகுப்புக்களும் நடத்துவதில்லை.

3.   இரவு 7.00 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தப்படுவதில்லை.

4.   கல்விப் பொதுத் தராதர சாதாரண வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணித்தியால கட்டணமாக 10 ரூபாவும், கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களில் வர்த்தகப் பிரிவு, கலைப் பிரிவு மாணவர்களுக்கு ஒரு மணித்தியால நேர வகுப்புக் கட்டணமாக 20 ரூபாவும் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கு 25 ரூபாவும் அறவிடுவது.

இதனை மேற்பார்வை செய்வதற்கென முதலமைச்சர் பணிமனை, மாநகர சபை, பிரதேசசெயலகம், கல்வித் திணைக்களம், பிரத்தியேக கல்விச் சாலை உரிமையாளர் அடங்கலாக 9 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இக் குழுவினர் மாதா மாதம் கலந்துரையாடல் நடத்தி பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காணும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

காலை வேளைகளில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக மிக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கும் பொறுப்பு கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X