பேரின்பராஜா சபேஷ் / 2017 ஜூலை 13 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பழிவாங்குவதற்காகவே தான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கூறி வருகின்றார். இதன் மூலம் கிழக்கு மாகாணசபைக்கு பெரும்பான்மையாகத் த.தே.கூவிலிருந்து
எவரும் தெரிவு செய்யப்படக்கூடாது என்ற வக்கிரப் போக்கு மாத்திரமே கோடிட்டுக் காட்டப்படுகின்றது” என, இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி தலைவர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி தலைவர் பா.அரியநேத்திரனை, நேற்று (12) தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மாகாணசபை அதிகாரத்தை முற்றாக எதிர்த்து, மாகாணசபைத் தேர்தலைப் புறக்கணித்துவந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மாகாணசபை ஆட்சி முறையை ஏற்றுக்கொள்வதற்கான முதற்படியாகும்.
த.தே.கூவை பழிவாங்குவதற்காக தான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது என்று பகிரங்கமாகக் கூறுவது, ஒரு கட்சியை அல்லது தனி நபர்களைப் பழிதீர்ப்பதற்கான என்ற சிந்தனையுடன் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதானது மக்களின் நலன், அரசியல் உரிமைக்காக அல்ல. தமிழ்ப் பிரதிநிதிகள் கிழக்கு மாகாணசபைக்கு பெரும்பான்மையாக தெரிவுசெய்யப்படக்கூடாது என்ற வக்கிர போக்கை மட்டுமே கோடிட்டுக் காட்டும் செயலாகும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சகல மாவட்டங்களிலும் போட்டியிட்டபோதிலும், ஆசனங்களையும் எதனையும் பெறவில்லை.
2013ஆம் ஆண்டு வட மாகாணசபைத் தேர்தலின்போது, மாகாணசபைத் தேர்தலை நிராகரிக்கும்படியான வேண்டுகோளை முன்வைத்தனர். ஆனால், வடமாகாண மக்கள் அந்த வேண்டுகோளை ஏற்கவில்லை. தற்போது வடக்கு, கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.
வட மாகாணசபையைப் பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எத்தனை கட்சி போட்டியிட்டாலும், அந்தக் கட்சிகளினூடாக தமிழர்களே தெரிவு செய்யப்படுவார்கள். ஆனால், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் தமிழர்கள் 40 சதவீதமும் முஸ்லிம்கள் 37 சதவீதமும் சிங்களவர்கள் 23 சதவீதமும் வாழ்கின்றனர். அது மட்டுமின்றி, தமிழர்களின் வாக்களிப்பு வீதமும் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, ஏனைய இனத்தவர்களே வாக்களிப்பில் அதிக ஆர்வம் காட்டுவர்.
2012இல் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், த.தே.கூவை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களும் வாக்குகளைச் சிதறடித்து பேரினவாத கட்சிகளின் வேட்பாளராக உள்ள முஸ்லிம் உறுப்பினர்களை மாகாணசபைக்கு அனுப்பியமை எல்லோரும் அறிந்ததே. தமிழ் மக்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு வாக்களித்திருந்தால், கிழக்கு மாகாணசபையில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி தமிழருக்கு கிடைத்திருக்கும்.
கிழக்கு மாகாணத்தில் சில தமிழர்களுக்கு ஆசைவார்த்தைகளும் சலுகைகளையும் காட்டிப் பேரினவாதக் கட்சிகளில் போட்டியிட வைத்து, தமிழர் வாக்குகளைச் சிதறடிக்க கங்கணம் கட்டிச் செயற்படுகின்றதை அரசியலில் அனுபவ முதிர்ச்சியுள்ளவர்கள் அறியவேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் இம்முறை தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறையுமானால், அது தமிழ் தேசிய இருப்பை கிழக்கு மாகாணத்தில் பாதிக்கும். இதற்கான முமுப்பொறுப்பபையும் த.தே.கூவை எதிர்த்துப் போட்டியிடும் தமிழ்க் கட்சிகள் ஏற்கவேண்டும். இது கிழக்கு மாகாணத்தில் பூர்வீக இருப்பை இல்லாமல் செய்யும் துரோகமாகும். இந்த யதார்த்தத்தை அனைவரும் உணரவேண்டும்.
ஜனநாயக ரீதியாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சியும் போட்டியிடலாம். ஆதைத் தடுக்கும் உரிமையோ, விமர்சிக்கும் உரிமையோ எனக்கில்லை. இருந்தும், கிழக்கு மண்ணில் இருந்து கடந்த இக்கட்டான பிரதேசவாத அரசியல் நிலவிய காலகட்டத்திலிருந்து இன்றுவரையும் தமிழ்த் தேசியத்தை கட்டிக்காத்து வருகின்றவன். அதற்காக அரசியல் பணி செய்கின்றவன் என்ற ரீதியில் எனது கருத்தை முன்வைக்கிறேன்” என்றார்.
15 minute ago
38 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
38 minute ago
3 hours ago
4 hours ago