2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

‘தேசியவாதத்தின் வஞ்சக நடைமுறை’

Editorial   / 2020 மே 25 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித் , வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

“நாடு முழுவதையும் சிங்கள, பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடைமுறையாகவே, தொல்லியல் துறை இலங்கையில் கையாளப்படுகிறது” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அத்துடன், “தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு, வெளிப்படுத்தப்பட வேண்டும். இத்துறைக்கென நியமிக்கப்படுவோர், துறைசார் நிபுணர்களாக இருக்க வேண்டும்.

“நாட்டின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்துறையில் நியமனங்கள் அத்தியாவசியமாதனதாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

தொல்லியல் துறை தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தலை இலக்கு வைத்து, வாக்காளரைக் கவர்வதற்கான முயற்சியாக எந்தவொரு நியமனமும் இக்காலத்தில் செய்யப்பட முடியாது என்பதே பொதுவான விதியாகும்.

“தொல்லியல் தொடர்பான விடயங்கள் தொன்மங்களைக் கண்டறிதல் என்பவற்றுக்கு அப்பால், இலங்கை முழுவதையும் சிங்கள, பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வருகின்ற வஞ்சகத் தனமான ஒரு நடைமுறையாகவே இலங்கையில் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டுக் கொண்டு வருகின்றது” என்றார்.

இதேவேளை, “தொல்லியல் என்ற பேர்வையில், கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகித்து, இலங்கைத் தீவை சிங்கள, பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி விசேட செயலணியை உருவாக்கியுள்ளார்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் குற்றஞ்சாட்டினார்.

“இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய தேசம் அங்கிகரிக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் இதே அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டு, வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களுடைய இருப்பை காட்டிக் கொடுத்து, நில அபகரிப்புக்கு துணை நின்றர்கள், இன்று தாங்கள்தான் கிழக்கை மீட்கப் போகின்றோம் வட, கிழக்கை தக்கவைப்போம் எனக் கூறுகின்றனர். இதைத் தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X