Princiya Dixci / 2021 ஜனவரி 11 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, வ.சக்தி, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், பாறுக் ஷிஹான், அப்துல்சலாம் யாசீம், அ.அச்சுதன், வி.சுகிர்தகுமார்
யாழ். பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு, இன்று (11) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் இருந்தும் விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளின் பேரில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. எனினும், அம்பாறை மாவட்ட மக்கள் அதனை நிராகரித்து வழமையான செயற்பாட்டில் இன்று ஈடுபட்டுள்ளனர். அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் சில கடைகள் திறந்திருந்ததுடன், சில கடைகள் மூடியிருந்தமையைக் காண முடிந்தது.

மட்டக்களப்பு
ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. கொரோனா அச்சுறுத்தலால் ஏற்கெனவே வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றபோதிலும் திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டன.
மட்டக்களப்பு, காத்தான்குடி, வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, கொக்ட்டிச்சோலை உட்பட பல நகரங்களிலும் கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன், அனைத்து அலுவல்களும் ஸ்தம்பித்திருந்தன. போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
சில பாடசாலைகள் நடைபெறுகின்றபோதிலும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவான நிலையிலேயே இருந்தது.

அம்பாறை
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஹர்த்தாலுக்கு விடுத்த கோரிக்கையை அம்பாறை மாவட்ட மக்கள் நிராகரித்து, வழமையான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், புடவைக் கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கின.
இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.
இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம் ,உள்ளிட்ட முக்கிய பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் வழமை போன்று இருந்தது. அத்துடன், அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தனர். கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது.
பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர்.

திருகோணமலை
திருகோணமலை நகரம் வழமை போன்று இன்று இயங்கியது. குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சில கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சில கடைகள் மூடப்பட்டுள்ளன.
அனைத்து தரப்பினரும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை நிர்மாணிப்பதற்காக அடிக்கல், இன்று காலை நாட்டப்பட்டமையால் ஹர்த்தால் தேவையில்லை என சிலர் சுட்டிக்காட்டினர்.
21 minute ago
33 minute ago
49 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
49 minute ago
57 minute ago