2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகிய மகன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டான்

Administrator   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

30.06.1990ஆம் திகதி ஜெயந்தன் (வயது 16) என்னும் எனது மகன் பாடசாலைக்கு செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது, இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார் என துரைநீலாவணை,8ஆம் வட்டாரத்தை சேர்ந்த சாமித்தம்பி வள்ளிப்பிள்ளை தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மண்டபத்தில் சனிக்கிழமை (22) காலை நடைபெற்ற காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'துறைநீலாவனையில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு செய்து வீடு வீடாகச் சென்று சோதனையிட்டுக்கொண்டிருந்தவர்கள் எனது மகனையும் அழைத்துச்சென்றனர்.

நான் பாடசாலைக்கு செல்லும் மகன் என அவனது பாடசாலை உபகரணங்களை காட்டியபோதிலும் மகனின் சேட்டைக்கழட்டி அவரின் கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டுசென்றனர்.

நாங்கள் பின்னால் சென்றபோது தடிகளினால் எங்களை இராணுவத்தினர் தாக்கினர். அந்தவேளையில் எனது மகன் உட்பட கிராமத்தின் பலரை குளப்பகுதிக்கு கொண்டுசென்று வைத்திருந்தனர். அவர்களில் 17 இளைஞர்களை பிடித்துவிட்டு ஏனையவர்களை விடுவித்தனர்.

எல்லாத்தாய்மாறும் அழுதுகொண்டு பெரியநீலாவணை சந்திக்கு சென்றபோது ஐயுப்பின் மில் பகுதியில் நின்ற இராணுவத்தினர் தடி கொண்டு எங்களை தாக்கினர்.

எனது மகன் உட்பட 17பேரையும் கைகளைக்கட்டி பஸ்சில் ஏற்றி காரைதீவு நோக்கி கொண்டுசென்றனர். இது தொடர்பில் அன்று பிரஜைகள் குழு,மாவட்ட அரசாங்க அதிபர்,இராணுவ உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதினோம்.

அனைத்து இடங்களுக்கும் சென்றோம்.இறுதியாக கொழும்புக்கும் சென்று தேடிப்பார்த்தோம் என்றார்.

மேலும்,காரைதீவு முகாமுக்கு காலையில் எழும்பியவுடன் செல்வோம்.எமது மகன்களை காட்டுமாறு கெஞ்சுவோம்.உங்கள் பிள்ளைகள் எதுவித தொடர்பும் இல்லாவிட்டால் விடுவோம் என்பார்கள்.

தினமும் காலையில் சென்றால் மாலை வரை அப்பகுதியிலேயே கிடப்போம்.நாங்கள் நடந்துசெல்லும்போது கல்முனை முருகன் ஸ்ரோர் பகுதியில் சடலங்கள் கிடக்கும்.

ஒரு தடவை ட்ரக்டரில் சடலங்களை அடுக்கி வைக்கோல் இட்டு எரித்துள்ளதை நாங்கள் கண்டோம்.

அந்தவேளையில் அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசியது.

நான் இலங்கையில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் எனது மகனை தேடிவிட்டேன். எங்கும் அவர் இல்லை' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X