2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரிய உதவியாளர்களின் நியமன தாமதத்துக்கு நான் பொறுப்பல்ல: இராதா

Sudharshini   / 2015 நவம்பர் 19 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

'மலையகத்திலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட 3,000 பேருக்கான உதவி ஆசிரியர் நியமனத்தில் இன்னும் 855 பேருக்கு நியமனம் வழங்கப்படாதுள்ளது. மேற்படி 855 பேரின் நியமனங்களுக்கான தாமதத்துக்கு  கல்வி அமைச்சரும்; அதிகாரிகளுமே பொறுப்பு. அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல' எனக் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துதார்.

கொழும்பில் அமைந்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சின்  காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'மலையக பெருந்தோட்ட ஆசிரியர்களை மையமாக கொண்டு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தில், இன்னும் 855 பேருக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை. அதற்கு காரணம் குறித்த விண்ணப்பதாரிகள் தேர்வில் சித்தி பெற்ற பின்பு அவர்கள் கோரியிருந்த அல்லது அவர்கள் தெரிவு செய்திருந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு வேறு பாடசாலைகளில் நியமனங்களை பெற்றுக் கொடுக்க எமது அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், இதற்கென அமைச்சரவை பத்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டு அதனை அமைச்சரவையில் தாக்கல் செய்து, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த பின்பு இந்த நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.

கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் என்னால் அமைச்சரவை பத்திரங்களை தாக்கல் செய்ய முடியாது. அதனை தாக்கல் செய்ய வேண்டிய பொறுப்பு கல்வி அமைச்சருக்கே இருக்கின்றது. எனது இராஜாங்க அமைச்சின் மூலமாக அதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதனை நாங்கள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடமும் அவருடைய அதிகாரிகளிடமும் கையளித்துள்ளோம்.

ஆனால், அவர்கள் இதுவரை அதனை அமைச்சரவையில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மிகுதியாகவுள்ள 855 ஆசிரியர்களும் என்னிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு அவர்களின் நியமனம் எப்பொழுது வழங்கப்படும் என வினவுகின்றனர்.

அவர்களின் நிலைமையை பார்க்கின்ற பொழுது மிகவும் கவலையாக இருக்கின்றது. நான் இந்த விடயங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான காரணம், எமக்கு வாக்களித்த வாக்காளர்கள் அவர்கள் நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை அவதானித்துக் கொண்டு இருக்கின்றார்கள். நான் அவர்களை ஏமாற்ற முடியாது.

மேலும், நான் மத்திய மாகாண கல்வி அமைச்சராக  இருந்த பொழுது பல வேலைத்திட்டங்களை தாமதமின்றி செய்துமுடித்துள்ளேன். அந்த வகையில் இவ்வாறு வேலைகள் இழுத்தடிகக்கப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

வாக்களித்த மக்கள் எம்மீது தவறான ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். நாங்கள் எதுவும் செய்யவில்லை அல்லது அரசாங்கத்திற்கு துதிபாடிக் கொண்டிருக்கின்றோம் என அவர்கள் நினைக்கலாம். என்னை பொறுத்தவரை சொல்ல வேண்டிய விடயங்களை ஒளிவு மறைவின்றி சொல்ல வேண்டும் என்பதில் நான் என்றும் தெளிவாக இருக்கின்றேன்.

நாங்கள் வாக்களிக்கத்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, வேறு யாரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு ஒரு போதும் கிடையாது' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .