2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'ஆடி முடிந்தவுடன் பதவியேற்பேன்'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இழுபறியிலிருந்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான  வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆடி மாதம் முடிந்தவுடன் வைபவ ரீதியாகத் தான் பதவியேற்கவுள்ளதாக அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவை ஸ்தாபகத் தலைவராகக் கொண்டு, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், 17.08.1958ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அவரது காலப்பகுதியிலிருந்து, ஈ.எம்.சொய்சா, ஆர்.எம்.ரத்நாயக்கா, வி.புத்திரசிகாமணி, திருமதி.கருணா, ஆர்.திவ்வியராஜன், ராஜா செனவிரத்ன மற்றும் பி.வேலாயுதம் ஆகியோர் சங்கத்தின் செயலாளர்களாகப் பதவி வகித்துள்ளனர். அமரர் பி.வேலாயுதத்தின் மறைவுக்குப் பின்னர், இச்சங்கத்தின் செயலாளர் பதவிக்கு ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், இப்பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்;டுள்ளதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பில் தெரிவித்துள்ள வடிவேல் சுரேஷ் எம்.பி,  'கூட்டொப்பந்த விடயத்தில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கப் போராடுவதுடன் கடந்த 16 மாதங்களுக்கான நிலுவைக் கொடுப்பனவையும் பெற்றுத்தருவதில் முழு மூச்சாக நின்று செயற்படுவேன்' என்றார்.

கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையில் கைச்சாத்திடும் பிரதான மூன்று தொழிற்சங்கங்களில் (இலங்கை தொழிலாளர்; காங்கிரஸ்,  பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .