2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'இலவச முன்பள்ளி கல்விக் கொள்கை தேவை'

Sudharshini   / 2016 ஜூலை 24 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

'இலங்கையில் முன்பள்ளிகளை நடத்தும் தனியார், சமயம் சார்பான அமைப்புகள் குறித்தும் அவர்கள் தரமான முன்பள்ளிக் கல்வியை வழங்குகின்றார்களா? என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டியுள்ளது' என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இலங்கையில் இலவச முன்பள்ளி கல்விக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளுக்கான முன்பிள்ளை பருவத்தினர் பராமரிப்பு மற்றும் கல்விக்கான கொள்கை வடிவமைப்புக்கான மாநாடு, மலேசியாவின் புத்ரஜாயா நகரில் இடம்பெற்றது.  மலேசியா கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டின்;  ஆரம்பிப்பு நிகழ்வில், 20 நாடுகளைச் சார்ந்த கல்வி அமைச்சர்கள் மற்றும் பசுபிக் கல்வி அமைச்சர்கள்  கலந்துகொண்டனர்.  இம்மாநாட்டில் இலங்கை சார்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

'இலங்கையில் தற்போது ஆரம்பக் கல்வியில் இணைத்துக்கொள்ளப்படும் சிறுவர்களில் 90 வீதமானோர் ஏதாவது ஒரு வகையில், முன்பள்ளிக் கல்வியை பெற்றிருக்கின்றனர்;. ஆனாலும், முன்பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுகின்றதா என்பது தொடர்பில் கண்காணிக்க வேண்டியுள்ளது.

முன்பள்ளிகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும்போது அவர்களது கல்வித் தகைமைகள்,  அவர்களுக்கான பயிற்சி, தகுந்த வேதனம் வழங்குதல் தொடர்பில் அரச மட்டத்தில் அக்கறை எடுக்க வேண்டியுள்ளது' என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை,  முன்பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற வகையில், அம்மாணவர்களுக்கு போதுமான தளபாட மற்றும் உபகரண வசதிகளை வழங்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

'தற்போது இலங்கையில்  சிறுவர் அபிவிருத்தி மன்றம், மகளிர் விவகார அமைச்சு  என்பன சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசியக் கொள்கையைக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கான கல்வி வழங்கும் முறைமையில் இலங்கைக்கென ஒரு தேசிய முன்பள்ளிக் கொள்கை தேவைப்படுகின்றது.  இலங்கையில் இலவசமானதும் கட்டாயமானதுமான முன்பள்ளி வழங்கும்  ஏற்பாடுகள் இல்லை. மலேசியா போன்ற நாடுகளில் முன்பள்ளி கல்வி வழங்கும் முறைக்கு ஏற்ப, எதிர்காலத்தில்  இலங்கையிலும் முன்பள்ளி  கல்வியை வழங்க நடவடிக்கை எடுப்போம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .