2021 மே 06, வியாழக்கிழமை

தொழிற்சாலையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ ஆ.ரமேஷ்

கொட்டக்கலை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள பத்தனை, தெலிவத்தை தோட்ட தொழிற்சாலையை திறக்கக் கோரி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்,  இன்று  (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தொழிற்சாலை கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதால்; தாம் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

'தொழிற்சாலை மற்றும் தோட்டத்தில் 300 பேர் பணியாற்றி வருகின்றோம். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை தொழிற்சங்க தலைவர்களுக்கூடாக தோட்ட நிர்வாகத்திடம் வினவியபோது, சுமார் 2 கோடி ரூபாயை தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் அவர்களிடம் பெற்ற கொழுந்துக்கும் வழங்க வேண்டியுள்ளது.

தோட்ட நிர்வாகம் கடனில் இயங்குகின்றது. தோட்ட கம்பனி முழுமையான நட்டத்தை எதிர்கொள்வதால் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது என காரணம் கூறியுள்ளனர். வழமை போன்று தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும் என்று கூறியே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த 4 வருடங்களாக தோட்டத்தில் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தி வேலைகளை தோட்ட நிர்வாகம் உடனடியாக செய்துகொடுக்க வேண்டும்.

காட்டு விலங்குகள் மற்றும் குளவி தொல்லைகளிலிருந்து தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தோட்ட அதிகாரி திஸ்ஸ த அன்றூஸிடம் கேட்ட போது, மேற்படி தொழிற்சாலையில் புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டபோதிலும்  கொழுந்தின் அளவு குறைவாக காணப்படுவதால் பெரும் நட்டத்திலேயே இயங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலை இயந்திரங்களுக்கான செலவீனம் அதிகரிப்பதால் கெலிவத்தை தோட்டத்தில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்து, கடந்த 3 மாதங்களாக குறித்த கம்பனி நிர்வாகங்களுக்கு கீழ் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

கிராம மற்றும் தனியார் தேயிலை தோட்டங்களிலிருந்து கொள்வனவு செய்யும் தேயிலை கொழுந்துக்கு உரியவிலை கொடுக்கப்படாததால் அவர்கள் எமது தொழிற்சாலைக்கு கொழுந்து தருவதில்லை. குறைவான கொழுந்தை தொழிற்சாலையில் அறைப்பதனால் ஏகப்பட்ட நட்டம் ஏற்படுவதால் இத்தொழிற்சாலையை குறுகிய காலத்துக்கு மூடியுள்ளோம்.

'தேயிலை விளைச்சல் அதிகரிக்கப்படும் பட்சத்தில் தொழிற்சாலை 2 மாதங்களில் திறக்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .