2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைகளில் அரசியல் தலையீடு; மாணவர்கள் பாதிப்பு

எம். செல்வராஜா   / 2017 ஜூன் 06 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண தமிழ்மொழி மூலமான பாடசாலைகளில், அரசியல் தலையீடுகள் அதிகரித்திருப்பதால், பாடசாலை சமூகம் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதாக, ஊவா மாகாண சபை உறுப்பினர் எம்.சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,

'இரு பிரதான கட்சிகளைக் கொண்ட நல்லிணக்க ஆட்சியின் கீழேயே, ஊவா மாகாண சபையும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஊவா மாகாண முதலமைச்சர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தபோதிலும், மாகாண அமைச்சரவையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த உபாலி சமரவீர முக்கிய அமைச்சராகவும் இருந்து வருகின்றார். ஆனால், ஊவா மாகாணத்தில் கல்வி அமைச்சர் யார் என்பதுகூட தெரியாத வகையில், செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மாகாண தமிழ்க் கல்விப் பிரிவில் முழுமையாக அரசியல் ரீதியிலான தலையீடுகள் ஆக்கிரமித்துள்ளன. மாகாண முதலமைச்சர் இதற்கு பதில் கூறியாக வேண்டும்.

அதிபர், ஆசிரியர்கள், கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களை இடமாற்றம் செய்வதற்கு, மாகாண இடமாற்றக் கொள்கைகள், விதிமுறைகள் ஆகியன பின்பற்றப்படல் வேண்டும். அத்துடன் கருணை இடமாற்றங்களும் புரிந்துணர்வுகளுடன் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆனால், இவைகள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டு, தத்தமது அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கமைய தான்தோன்றித்தனமான வகையில், அதிபர், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாகாண கல்வி அமைச்சராக, மாகாண முதலமைச்சர் இருந்து வருகின்ற போதிலும், அவருக்கு கொடுக்கும் அழுத்தங்களால் இடமாற்றங்கள் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண தமிழ்க் கல்விப் பிரிவிலேயே, இவ் அவலங்கள் நிகழ்கின்றன. பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் 8 அதிபர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதை, விசேடமாகக் கூற வேண்டியுள்ளது.

மாகாணத்தின் ஏனைய தமிழ்ப் பாடசாலைகள் பலவற்றில் அதிபர் தரமுள்ளவர்கள் அகற்றப்பட்டு, அதிபர் தரமற்றவர்கள் அரசியல் செல்வாக்கினால் அதிபர்களாக்கப்பட்டுள்ளனர்.

கல்வியொன்றின் மூலமாகவே, சமூகத்தில் முன்னேற்றகரமான மாற்றம் ஏற்படவேண்டியிருக்கின்றது. இக்கல்வித்துறையை மேம்பாடடைய வைக்க வேண்டியது, அனைவரதும் கடப்பாடாகும். ஒருசிலர் தத்தமது கட்சியையும், தொழிற் சங்கத்தையும் வளர்க்க, மாகாண தமிழ்க் கல்வித்துறையை பயன்படுத்த வேண்டாமென்று, சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இதனையும் மீறி, அரசியல் பழிவாங்கல்கள் தொடருமேயானால் அடிப்படை மனித உரிமை மீறலுக்காக நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்படும்” என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .