2026 மார்ச் 19, வியாழக்கிழமை

’’தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே உள்ளனர்’

Editorial   / 2026 மார்ச் 19 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

இலங்கைத்தீவு சர்வதேச வல்லரசுகளின் பூகோள ஆதிக்கப் போட்டிக்குள் சிக்குண்டுள்ளதால், அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஷ் தெரிவித்தார்.

தியாக தீபம் அன்னை பூபதியின் 38-வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் வியாழக்கிழமை (19) சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் தொடக்கத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராகத் தமிழர்கள் தங்களது தாயக நிலப்பரப்பில் சுதந்திரமாக வாழப் போராடி வந்தனர். அந்தச் சூழலில் அமைதியை நிலைநாட்ட வந்த இந்திய அமைதி காக்கும் படை (IPKF), தனது நோக்கத்திற்கு மாறாகத் தமிழ் மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

அக்காலப்பகுதியில், இந்திய இராணுவத்தின் கைதுகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் போன்ற அத்துமீறல்களை நிறுத்தக் கோரி 1988 மார்ச் 19-ம் திகதி மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணியின் தலைவி அன்னை பூபதி இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அறப்போராட்டத்தைத் தொடங்கினார். 32 நாட்கள் நீடித்த அந்த உண்ணாநோன்பின் இறுதியில் அவர் தனது உயிரைத் தியாகம் செய்தார்.

அன்னை பூபதியின் தியாகம் தமிழ் தேசத்தின் இருப்பை உலகிற்கு உரக்கச் சொன்னது. தியாக தீபம் திலீபனைத் தொடர்ந்து அன்னை பூபதியின் ஈகம், போராட்டக் களத்தில் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

தற்போது பூகோள ஆதிக்கப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ள ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இலங்கைத்தீவில் நிலவும் இந்தச் சூழலால் தமிழர்கள் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டு வருகின்றனர். இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடத் தமிழர்கள் சரியான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

"எந்தவொரு பூகோள ஆதிக்கப் போட்டி நிலவினாலும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தேசம் மற்றும் இறைமை ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க எந்தத் தலைமைத்துவம் உறுதியுடன் முன்னிற்கின்றதோ, அந்தத் தலைமைத்துவத்தையே மக்கள் ஆதரிக்க வேண்டும். அதுவே இத்தகைய ஈகங்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகும்" என அவர் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .