2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

'பிதற்றுகிறது கூட்டணி'

Kogilavani   / 2016 மே 26 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

'போராட்டங்களில் கூட நிலையானதோரு கொள்கையைப் பின்பற்ற முடியாத தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், தொழிலாளர் போராட்டங்களை எங்கு நடத்துவதென்று தெரியாமல் பிதற்றிக்கொண்டு, அறிக்கைகளை விடுத்த வண்ணம் உள்ளனர். அப்போராட்டங்களை எவ்வகையில், எப்படி முன்னெடுப்பது என்று தெரியாத நிலையிலேயே அவர்கள் இருக்கின்றனர் என ஊவா மாகாண அமைச்சரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,

'அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்தின்போது, தனியார் ஊழியர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட 2,500 ரூபாய் சம்பள உயர்வை, தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, மே தினத்தன்று அறைகூவல் விடுத்த த.மு.கூ.வினர், அதற்கான போராட்டத்தை மே 24ஆம் திகதியன்று நடத்துவதாகவும் அறிவித்தனர். அதன்;பிறகு 25ஆம் திகதியன்று, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

எமது மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி சிறிதும் கணக்கெடுத்துக் கொள்ளாத த.மு.கூ.வினரின் செயற்பாடுகள், அரசியல் மற்றும் தொழிற்சங்க முதிர்ச்சியின்மையை, மீண்டும் மீண்டும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. அத்துடன், இவர்களது வேலைத்திட்டங்களும் கேள்விக்குரியனவாகவே இருக்கின்றன.

தொழிலாளி ஒருவர், மாதம் இருபது நாள் வேலை செய்தால், அரசாங்கம் குறிப்பிடும் 100 ரூபாய் சம்பள உயர்வு அடிப்படையில், 2,000 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட வேண்டும்.  2015ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி முதல் இது வரையிலான 16 மாதங்களுக்கு, 32,000 ரூபாயினை  நிலுவைச் சம்பளமாக வழங்கவிருக்கின்றதா, இச்சம்பள உயர்வானது தொடர்ந்து வழங்கப்படுமா, ஒரு சில மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்படுமா, என்பது புரியாதுள்ளது. இதனை, மலையகத்தின் அமைச்சர்களாக இருக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் பகிரங்கப்படுத்த  வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .